9 நாட்களில் இத்தனை கோடியா? நாளுக்கு நாள் எகிறும் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" படத்தின் வசூல்...!!
பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளுக்கு பிறகு இந்த திரைப்படம் நேற்று மட்டும் ரூ.25 கோடி வசூலித்துள்ளது.
மும்பை,
காஷ்மீரில் 1990-ஆம் ஆண்டுகளில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர்.
அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கு மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கபட்டது.
இந்த பயங்கரவாத தாக்குதல்கள், எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் இருந்து லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறு இடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
இதற்கிடையில், காஷ்மீரில் 1990-களில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.
’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை விவேக் ரஞ்சன் அக்னிகொத்ரி இயக்கியுள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்திற்கு அரியானா, மத்திய பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரிச்சலுகை வழங்கியுள்ளது.
இந்த திரைப்படம் வெளியாகிய முதல் 6 தினங்களில் இந்தியாவில் மட்டும் ரூ.80 கோடி வசூல் சாதனை படைத்து இருந்தது . பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளுக்கு பிறகு இந்த திரைப்படம் 9-வது நாளான நேற்று மட்டும் ரூ.25 கோடி வசூலித்துள்ளது.
இதன் மூலம் வெளியாகிய 9 தினங்களில் இந்த திரைப்படம் ரூ.145 கோடி வசூலித்துள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. வார இறுதி நாளான இன்று இதன் வசூல் சாதனை ரூ.170 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 25 ஆம் தேதி இயக்குனர் ராஜமவுலி இயக்கியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான ஆர்ஆர்ஆர் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு முன் இந்த திரைப்படம் உலகெங்கிலும் சேர்த்து ரூ. 300 கோடி வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.