உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் “விக்ரம்”...!! - ரிலிஸ் தேதியை அறிவித்த கமல்ஹாசன்

விக்ரம் திரைப்படம் திரைஅரங்குகளில் வெளியாக உள்ள தேதியை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

Update: 2022-03-14 02:28 GMT
சென்னை, 

நடிகர் விஜய் நடிப்பில் 'மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஆக்‌ஷன் திரில்லர் படமான விக்ரம் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

கமலுடன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, நரேன், செம்பன் வினோத் ஜோஸ், மகேந்திரன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

முன்னதாக விக்ரம் படத்தின் டைட்டில், டீசருடன் 2020ம் ஆண்டு கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ம் தேதி வெளியிடப்பட்டது. 1986ல் கமல் நடித்து வெளிவந்த விக்ரம் படத்தின் தீம் மியூசிக்கை ரீமிக்ஸ் செய்து இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளனர். இந்த சூழலில் இந்த படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பாளர்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் விக்ரம் திரைப்படம் திரைஅரங்குகளில் ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ளதாக கமல்ஹாசன் இன்று காலை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் "விக்ரம்" உலகின் சிறந்த திரை அரங்குகளில் ஜூன் 3ஆம் தேதி முதல்..” என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். மேலும் படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ்-ஐயும் அவர் பகிர்ந்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்