இந்தி நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தி நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புனே,
தமிழில் வி.ஐ.பி. என்ற படத்தில் நடித்தவர் நடிகர் அனுபம் கெர். இந்த படத்தில் நடிகை சிம்ரனின் தந்தையாக நடித்துள்ளார். இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி அமைப்பின் முன்னாள் தலைவரான இவர், இந்தி திரையுலகில் பிரபலம் வாய்ந்தவர். பல்வேறு குணசித்ர வேடங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர்.
இவரது குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எனது தாயார் துலாரிக்கு லேசான கொரோனா பாதிப்பு காணப்பட்டது. இதனால், அவரை நாங்கள் கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம்.
எனது சகோதரர், அவரது மனைவி மற்றும் மருமகள் ஆகியோர் மிக கவனமுடன் இருந்தபொழுதும், அவர்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் வீட்டிலேயே தங்களை சுய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தி கொண்டுள்ளனர்.
இதேபோன்று, எனக்கும் கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது என அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.