நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளதாக வருமான வரித்துறை தகவல்
2 திரைப்பட வருமானத்திற்கு நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
நடிகர் விஜய் பிகில் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் வெற்றி பெற்று இந்திய அளவில் வசூல் வேட்டையில் முதல் 10 இடங்களை பிடித்தது.
இந்தநிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த கணக்கில் நடிகர் விஜய்க்கு கொடுத்த சம்பளம் குறித்து கணக்கு காட்டப்பட்டுள்ளது.
அந்த கணக்கும் நடிகர் விஜய் வருமான வரித்துறையிடம் கொடுத்த கணக்கும் முரண்பாடாக இருந்தது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த பிப்ரவரி 5-ந்தேதி அதிரடியாக நடிகர் விஜய்க்கு சொந்தமான பனையூர், சாலிகிராமத்தில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பிகில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் குழுமம், சினிமா பைனான்சியர்
அன்புச்செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அன்பு செழியன் வீட்டில் ரூ-.77 கோடி ரொக்கப்பணம் மற்றும் சோதனை நடந்த இடங்களில் ஏராளமான ஆவணங்களையும் எடுத்து சென்றார்கள்.
இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி நடிகர் விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர்.
3 வாகனங்களில் வந்த 8-க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து ஆய்வில் ஈடுபட்டுனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தி உள்ளதாகவும் பிகில் படத்திற்கு ரூ.50கோடி, மாஸ்டர் படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளதாகவும் 2 படங்களின் வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தி உள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.