மெர்சல் திரைப்பட காட்சிகளை யாருக்காகவும் நீக்க கூடாது - தென்னிந்திய நடிகர் சங்கம்

மெர்சல் திரைப்பட காட்சிகளை யாருக்காகவும் நீக்க கூடாது என தென்னிந்திய நடிகர் சங்கம் கூறியுள்ளது.

Update: 2017-10-21 13:54 GMT
சென்னை,

விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடி கொண்டுள்ளது.  இது மருத்துவ துறையில் நடக்கும் தவறுகளை மையமாக வைத்து வெளிவந்துள்ளது. விஜய் ஐந்து ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். வசூலிலும் இந்த படம் சாதனை நிகழ்த்தி வருகிறது.

இந்த  படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. வரி பற்றிய வசனத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அத்துடன் டாக்டர்களும் தங்களை அவதூறு செய்வது போன்ற காட்சிகள் வைத்து இருப்பதாக கண்டித்து வருகிறார்கள்.

ஜி.எஸ்.டி. வசனத்தை நீக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியினர் வற்புறுத்தி உள்ளனர்.  படத்தில் விஜய் பேசும் சர்ச்சைக்குரிய வசனங்கள் மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆட்சியை விமர்சிப்பதாக உள்ளது என்று அந்த கட்சியினர் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் கூறியிருப்பதாவது:

மெர்சல் திரைப்பட காட்சிகளை யாருக்காகவும் நீக்க கூடாது.  கருத்து சுதந்திரம் சினிமா ஊடகத்துக்கும் கலைஞர்களுக்கும் கிடையாதா? 
இது போன்ற செயல்கள் பிற்காலத்தில் பல பெரிய பிரச்சனைகள் உருவாக காரணமாகும். தணிக்கையான படத்தை தனிநபர் விமர்சனங்களுக்கு மாற்றுவது கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறியாக்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்