இயற்கை சாயங்கள் பூசப்பட்ட சேலைகள் பராமரிப்பு

துவைப்பது, இஸ்திரி செய்வது, அலமாரியில் வைத்து பாதுகாப்பது போன்ற அனைத்து செயல்களிலும் கவனத்தோடு இருக்க வேண்டும். முறையாக பராமரிக்காவிட்டால் இயற்கை சாயம் ஏற்றப்பட்ட சேலைகள் விரைவாகவே பொலிவு இழந்துவிடும்.;

Update: 2021-10-25 04:30 GMT
வேர்கள், இலைகள், பூக்கள், காய்கறிகள், பழங்களின் தோல்கள், மண்ணுக்கு அடியில் கிடைக்கும் தாதுக்கள் போன்றவற்றில் இருந்து பெறப்படும் சாயங்களை ‘இயற்கை சாயங்கள்’ என்கிறோம். இந்த சாயங்கள் துணிகளுக்கு வண்ணமேற்றப் பயன்படுகின்றன.

கடுக்காயை பதப்படுத்தி ஒரு விதமான மஞ்சள் நிறம் உருவாக்கப்படுகிறது. இண்டிகோ எனும் செடியில் இருந்து நீல நிறச் சாயம் பெறப்படுகிறது. வெல்லத்தையும், இரும்புத் துகள்களையும் நொதிக்க வைத்து கருப்பு நிறச் சாயம் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு முற்றிலும் இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை சாயங்களால் வண்ணமேற்றப்பட்ட சேலைகளை பராமரிப் பது சற்றே கடினமான செயல் தான். 

துவைப்பது, இஸ்திரி செய்வது, அலமாரியில் வைத்து பாதுகாப்பது போன்ற அனைத்து செயல்களிலும் கவனத்தோடு இருக்க வேண்டும். முறையாக பராமரிக்காவிட்டால் இயற்கை சாயம் ஏற்றப்பட்ட சேலைகள் விரைவாகவே பொலிவு இழந்துவிடும். சரியான முறையில் பராமரித்தால் இத்தகைய சேலைகள் பல வருடங்கள் புதுப்பொலிவுடன் இருக்கும்.

இயற்கை சாயங்களுக்கு ஒளியே முதல் எதிரி. நேரடி சூரிய ஒளியின் வெளிப்பாடு, வீடுகளிலோ அல்லது அலமாரிகளிலோ பிரகாசமான ஒளி படும் இடங்களில் இவற்றை வைப்பது நிறத்தை மங்கச் செய்யும். இயற்கை சாயம் ஏற்றப்பட்ட சேலைகளை நேரடி சூரிய ஒளியில் உலர்த்தக்கூடாது.

இயற்கையாக சாயமிடப்பட்ட புடவைகள் மற்றும் துணிகளை உள் பக்கமாக மடித்து பழைய வேட்டிகள் அல்லது வெள்ளை துப்பட்டாக்களில் பொதிந்து வைக்கலாம்.

இந்த வகை புடவைகளை சலவை செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். ஆரம்பகாலத்தில் சலவை செய்யும்போது இரண்டு அல்லது மூன்று முறை சாயம் போக நேரிடும். இதன் மூலம் துணியில் ஏற்றப்பட்டிருக்கும் அதிகப்படியான சாயம் வெளியேறும். சில நேரங்களில் அடர்த்தியான நிறங்கள் வெளிர் நிறங்களாக மாறக்கூடும்.

இயற்கையான சோப்புகள் அல்லது கூந்தலுக்கு பயன்படுத்தும் மென்மையான ஷாம்பு உபயோகித்து இந்த துணிகளை துவைக்கலாம். பட்டுத்துணிகளை உலர் சலவைக்கு கொடுப்பதே சிறந்தது.
சலவை செய்ய தூய்மையான நீரைப் பயன்படுத்துவது நல்லது. உப்பு நீர் இந்த வகை துணிகளுக்கு ஏற்றது அல்ல.

இயற்கை சாயம் இடப்பட்ட புடவைகளை மிதமான வெப்ப நிலையில் மட்டுமே இஸ்திரி செய்ய வேண்டும். உள் பக்கமாக திருப்பி போட்டு இஸ்திரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்