பணிப் பெண்களைப் பாராட்டுங்கள்
வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விடுமுறை அனுபவிக்கும் பலர், அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களுக்கு வார விடுமுறை தருவது பற்றி ஒரு நாளும் நினைப்பது இல்லை.
வீட்டு வேலைகளைச் செய்வதற்காக இன்று வித விதமான சாதனங்கள் வந்துவிட்டாலும், பணிப்பெண்கள் இல்லாதுபோனால் பல குடும்பத் தலைவிகளின் நிலைமை திண்டாட்டம்தான்.
நம்மால் நம்முடைய வீட்டு வேலைகளைச் செய்ய முடியாத சூழ்நிலையில், அதைச் செய்து கொடுத்து உதவும் பணிப்பெண்களும் நம்மைப் போல மனிதர்கள்தானே என பெரும்பாலானவர்கள் நினைப்பது இல்லை. பல வீடுகளில் அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்துவது இல்லை என்பது வேதனை அளிக்கும் உண்மையாகும்.
அதிகம் படிக்காத பெண்கள், குடும்பச் சூழ்நிலை காரணமாகவே வீட்டு வேலைக்கு வருகிறார்கள். பல குடும்பங்களில், கணவனின் பொறுப்பற்ற தன்மையால் ஏற்படும் பிரச்சினைகளைப் பொருளாதார ரீதியாகச் சமாளிக்கும் பொறுப்பு பெண்கள் மீது திணிக்கப்படுகிறது.
குடும்பச் செலவு, குழந்தைகளின் கல்வி, மருத்துவம் என பல்வேறு சுமைகளையும், அவர்கள் தங்களுடைய சொற்ப சம்பளத்தை வைத்துத்தான் சமாளிக்க வேண்டி உள்ளது. இருவர் சம்பாதிக்கும் குடும்பங்களே இன்றைய காலகட்டத்தில் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டி இருக்கும்போது, பணிப்பெண்கள் வாழ்க்கை நிலை எத்தனை பரிதாபத்துக்குரியது என்பதை உணர வேண்டும்.
வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விடுமுறை அனுபவிக்கும் பலர், அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களுக்கு வார விடுமுறை தருவது பற்றி ஒரு நாளும் நினைப்பது இல்லை.
அவருக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ உடல் நலமில்லை, அல்லது குடும்பத்தில் ஒரு விசேஷம் என்றால், அவர் வேலைக்கு வரமுடியாதபோது, அதைப் புரிந்துகொண்டு சிரித்த முகத்துடன் ‘‘வேலைக்கு வரவில்லையென்றால் பரவாயில்லை; நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று கூறும் ஆட்கள் மிகவும் குறைவு.
பணிப்பெண்கள் செய்யும் வேலையில் குறை இருந்தால், உடனே அதைச் சுட்டிக்காட்டும் நாம், அவர்கள் குறிப்பிட்ட வேலையை நன்றாக செய்து முடிக்கும்போது பாராட்ட வேண்டியதும் அவசியமானது. அன்றாடம் நமக்காக உழைக்கும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். உடல் நிலை சரியில்லாமல் வேலைக்கு வரவில்லை என்றால், மறுநாள் வேலைக்கு வந்ததும், அவர்களுடைய உடல் நலம் பற்றி விசாரிக்க வேண்டும்.
பணம், நகைகள், இதர முக்கிய பொருட்களை நாம் அலட்சியமாக எங்காவது வைத்துவிட்டு, அதைத் தேடுகிறபோது, வேலை செய்யும் பெண்மணி எடுத்திருப்பாரோ என சந்தேகப்படாமல் தெளிவாக ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
‘சம்பளம் வாங்கிக்கொண்டு, வீட்டு வேலை செய்பவர்தானே அவர்?’ என்ற எண்ணம் நமக்கு இருக்குமானால், ‘சும்மாவா பணம் கொடுக்கிறார்கள்? செய்யும் வேலைக்குத் தானே சம்பளம் கொடுக்கிறார்கள்?’ என்ற எண்ணம் அவர்களுக்கும் இருக்கும். வீட்டு வேலை செய்பவரையும், நம் குடும்ப உறுப்பினராக எண்ணி, மனிதநேயத்துடன் நடத்தினால், அவர்களும். ‘இது நம்ம வீடு’ என்ற பாசத்துடன் வேலை செய்வார்கள். அந்தப் பாசம், அவர்கள் துலக்கும் பாத்திரத்திலும் பளிச்சிடும்.