பேனா ஹோல்டர்
துணி தைக்கும் நூலை முழுவதும் பயன்படுத்திய பின்பு, அது சுற்றியிருந்த காகிதச் சுருளை தூக்கிஎறியாமல் உபயோகமான பேனா ஹோல்டர் எவ்வாறு செய்வது? என்று இங்கே பார்ப்போம்.
துணி தைக்கும் நூலை முழுவதும் பயன்படுத்திய பின்பு, அது சுற்றியிருந்த காகிதச் சுருளை தூக்கிஎறியாமல் பயனுள்ள கைவினைப் பொருட்கள் செய்யலாம். அந்த வகையில் உபயோகமான பேனா ஹோல்டர் எவ்வாறு செய்வது? என்று இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பழைய நூல் சுருள்கள்
பசை
அட்டை
கத்தரிக்கோல்
அளவுகோல்
பெயிண்ட்
செய்முறை:
1. படத்தில் காட்டியது போல நூல் சுருளின் விளிம்பில் சிறிது பசையைத் தடவி, மற்றொரு நூல் சுருளை அதனுடன் சேர்த்து ஒட்டவும். இதே போல தேவையான அளவுக்கேற்ப செய்து கொள்ளவும்.
2. ஒட்டப்பட்ட 6 நூல் சுருள்களை பக்கவாட்டில் வைத்து ஒட்டிக்கொள்ளவும். பின்னர் கீழிருந்து 3 சென்டிமீட்டர் அளவு குறித்து, அதனை வெட்டி நீக்கவும். பின்பு படத்தில் உள்ளவாறு சிறிது இடைவெளி விட்டு 5 நூல் சுருள்களை ஒட்டிக்கொள்ளவும். இவ்வாறே மேலும் இரண்டு ஜோடிகள் செய்து கொள்ளவும்.
3. ஒட்டப்பட்ட நூல் சுருள்களை நேர் எதிராக சேர்த்து செவ்வக வடிவில் ஒட்டிக்கொள்ளவும்.
4. பின்பு அடிப்பகுதியில் அதன் அளவுக்கேற்றவாறு, அட்டையை கத்தரித்து ஒட்டவும்.
5. இவ்வாறு வட்ட வடிவ அட்டையின் மீது சுற்றிலும் நூல் சுருளை வட்ட வடிவத்தில் ஒட்டிக்கொள்ளவும்.
6. ஒட்டப்பட்ட செவ்வக வடிவ நூல் சுருள் பெட்டியையும், வட்ட வடிவ நூல் சுருளையும் படத்தில் உள்ளவாறு பெரிய அட்டையின் மீது ஒட்டிக்கொள்ளவும்.
7. பின்னர் அட்டையைச் சுற்றிலும் படத்தில் உள்ளவாறு பாதியாக வெட்டி வைக்கப்பட்ட நூல் சுருள்களை ஒட்டி, விருப்பமான வண்ணத்தை அடிக்கவும்.
இப்பொழுது சுலபமான மற்றும் உபயோகமான பேனா ஹோல்டர் தயார். இதில் ஒரு பக்கம் பேனாவையும், மற்றொரு பக்கம் பூக்களையும் வைத்து அழகு சேர்க்கலாம்.