ஓசியில் படம் பார்த்து என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? இயக்குனர் பேரரசு
குறும்பட விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பேரரசு பட விமர்சனம் செய்பவரை காட்டமாக விமர்சித்துள்ளார்.;
''புளுசட்டை'' என்ற பட விழா, சென்னையில் நடந்தது. இந்த படத்தில், கடுமையாக விமர்சனம் செய்பவரின் நாக்கை அறுப்பது போல் ஒரு காட்சி, அந்த குறும்படத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு நடிகர் பயில்வான் ரங்கநாதன் கண்டனம் தெரிவித்தார். ''கடுமையாக எழுதுவது தவறுதான் என்றாலும், நாக்கை அறுத்து தண்டிப்பது போல் எப்படி காட்சி வைக்கலாம்?'' என்று கேள்வி கேட்டார்.
அதற்கு டைரக்டர் பேரரசு எதிர்ப்பு குரல் எழுப்பினார். ''நான் உதவி இயக்குனராக 10 வருடங்கள் கஷ்டப்பட்டேன். டைரக்டராக 5 வருடங்கள் ஆனது. அந்த 15 வருடங்களில் ஊருக்கு கூட போகமுடியவில்லை. இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு படம் இயக்கி, அது வெளிவரும்போது, கடுமையாக தாக்கி, வா போ என தரக்குறைவாக எழுதி மனதை காயப்படுத்தினால், ஒரு புது டைரக்டரின் மனம் என்ன பாடுபடும்?'' என்றார்.
''கடுமையான சொற்களால் தாக்கி எழுதுபவர்கள் தங்கள் சொந்த காசில் படம் பார்த்து எழுத வேண்டும். ஓசியில் படம் பார்த்து எழுதக்கூடாது'' என்று சொன்னார்.
விழாவின் நோக்கம் மறந்து வேறு பாதையில் விலகி, விவகாரமாகும் சூழ்நிலையை உணர்ந்த ஜாக்குவார் தங்கம் மேடையில் இருந்து இறங்கி வெளிநடப்பு செய்தார்.
காரசாரமாக நடந்த இந்த படவிழா, இறுக்கமான சூழ்நிலையில் முடிவடைந்தது.