தலைவர் 171 : ரஜினியுடன் இணையும் சுருதிஹாசன்- சத்யராஜ்?

‘தலைவர் 171 ' படத்தில் நடிகை சுருதிஹாசனும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.;

Update: 2024-04-15 13:41 GMT

ரஜினிகாந்த் கடைசியாக இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் 'ஜெயிலர்' படத்தில் நடித்தார்.இப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்குப் பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக 'தலைவர் 171 ' என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. மேலும் ரசிகர்களிடம் இது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதில் ரஜினி தனது கைகளில் தங்க கடிகாரம் - கை விலங்கு அணிந்து இருந்தார். இதனை பார்த்த ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்கள் தோன்றின. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் பரவியது.

இந்நிலையில் 'தலைவர் 171 ' படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இப்படத்தில் நடிக்க ரன்வீர் சம்மதித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் "பர்ஸ்ட் லுக்" போஸ்டர் முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்ததுடன் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் 'டைட்டில் ப்ரமோ' வருகிற 22-ந்தேதி வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் நடிகை ஷோபனா 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரஜினி படத்தில் நடிகை சுருதிஹாசனும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதே போல் நடிகர் சத்யராஜ் இப்படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்