'கொட்டுக்காளி' அர்த்தம் என்ன? - படக்குழு பகிர்ந்த பதிவு

நடிகர் சூரி நடித்துள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Update: 2024-08-22 01:37 GMT

சென்னை,

`கூழாங்கல்' திரைப்படம் பல அங்கீகாரங்களை இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜுக்குப் பெற்றுத் தந்தது. இதற்குப் பிறகு, இவர் சூரியை வைத்து இயக்கியிருக்கிற திரைப்படம் 'கொட்டுக்காளி'. சிவகார்த்திகேயன் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இப்படம் பெர்லின், ரோட்டர்டேம் ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.

இத்திரைப்படத்தில் சூரியுடன் மலையாள நடிகை அன்னா பென் நடித்திருக்கிறார். இதுதான் இவர் நடிக்கும் முதல் தமிழ்த் திரைப்படம். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. படத்தில் இசையமைப்பாளர் இல்லாதது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இதற்கிடையில், இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ், நடிகர் சூரி மற்றும் நடிகை அன்னா பென் ஆகியோர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் படத்தின் கதை குறித்து பேசும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், 'கொட்டுக்காளி' என்பது தென் தமிழகத்தில் அதிகமாக புலக்கத்தில் உள்ள ஒரு சாதாரண வார்த்தை தான். இதற்கு அர்த்தம் என்னவென்றால் 'ஒரு பெண் தனக்கு விருப்பமானதை செய்யும்போதும், அது ஊராருக்கு தவறாக தெரிந்தால் அந்த பெண்ணை அவர்கள் கொட்டுக்காளி என்று அழைப்பார்கள்' என்று இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் கூறியுள்ளார்.

மேலும் நடிகர் சூரி, இப்படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரம் மிகவும் சவாலானது என்றும், நடிகை அன்னா பென் இப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் இப்படம் குறித்த தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்