மனசாட்சி என்று பெயர் சூட்ட நினைத்தோம்

Update: 2023-06-22 05:43 GMT

சாந்தி தியேட்டரைக் கட்டிய, பிரபல பட அதிபர் ஜி.உமாபதியின் மகன் யு.கருணாகரன் சில நினைவலைகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

"சாந்தி தியேட்டர் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கும்போது எனக்கு வயது 14. கட்டிடப் பணிகள் 1960-ல் தொடங்கி, 1961-ம் ஆண்டு முடிவடைந்தது. என் தந்தை உமாபதியும், சிவகங்கை சமஸ்தான ராஜாவான சண்முகராஜாவும் இணைந்து இந்தத் தியேட்டரை உருவாக்கினார்கள். 'தூய உள்ளம்' தான் முதல் படம். 1,250 சீட் போட்டிருந்தோம். அந்தவகையில் தமிழகத்திலேயே அதிக இருக்கைகள் கொண்ட தியேட்டராக சாந்தி தியேட்டர் புகழ்பெற்றது. பால்கனியில் மட்டுமே 450 சீட்கள் இருந்தன. இத்தனை பால்கனி சீட்களை கொண்ட தியேட்டரை தமிழகம் மட்டுமல்ல ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலும் பார்த்திருக்க முடியாது. மும்பையில் உள்ள மராத்தா மந்திர் என்ற தியேட்டரை பார்த்து, அதில் உள்ள சிறப்பம்சங்களை சாந்தி தியேட்டரில் ஏற்படுத்தினோம். சிறப்புமிக்க இந்த பணிகளை 'பென் என்ஜினீயரிங்' நிறுவனத்தார் முடித்துத் தந்தனர். எல்லாவற்றையும்விட 'பாசமலர்', 'பாவ மன்னிப்பு', 'பாத காணிக்கை' போன்ற சிவாஜிகணேசன் 'பா' சீரிஸ் படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றன. சிவாஜி நடித்த ஒரு படம் ஓடிக் கொண்டிருக்கும் போது, அவரது இன்னொரு படம் வந்துவிடும். இதனால் அந்தப் படத்தை திரையிடுவோம். இதனால் எம்.ஜி.ஆர். படங்களைக்கூட திரையிட முடியாத சூழல் நிலவியது.

தொடர் வெற்றி படங்களை கொடுத்த சாந்தி தியேட்டர், சென்னைக்கே ஒரு 'லேண்ட் மார்க்' ஆக இருந்தது. தென்னிந்திய சினிமாவை விரும்புபவர்கள், ஏன் சென்னை வருபவர்கள்கூட சாந்தி தியேட்டரைப் பார்க்காமல் போகவே மாட்டார்கள். அப்படி அடையாளப் புகழுடன் சாந்தி தியேட்டர் திகழ்ந்தது.

சிவாஜிகணேசன் விரும்பியதால், சாந்தி தியேட்டரை அவருக்கே அப்பா கொடுத்துவிட்டார். அதேவேளை உடனடியாக அதே சாலையில் 20 கிரவுண்ட் இடத்தை வாங்கி, ஒரு தியேட்டரைக் கட்டினோம். ஆனந்தமாக இருக்கவேண்டும் என்பதால், என் தம்பி பெயரில் ஆனந்த் தியேட்டர் என்று அதற்கு பெயர் சூட்டினோம். சாந்தி தியேட்டருக்கு இன்னொரு சிறப்பும் உள்ளது. முதலில் அந்தத் தியேட்டருக்கு மனசாட்சி என்ற பெயர் தான் யோசித்தோம். பின்னர் அது 'செட்' ஆகாது என்பதால் சாந்தி பெயரை தேர்வு செய்தோம். சாந்தி என்பது என் தங்கையின் பெயர். சிவாஜிகணேசனின் மகள் பெயரும் சாந்தி என்பதால், விலைக்கு விற்ற பின்னரும் அந்த தியேட்டரில் இருந்து சாந்தி என்ற பெயர் மாறவில்லை. அந்த அடையாளத்தின் மதிப்பு இன்னும் உயர்ந்தது என்றே சொல்லலாம்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்