"உங்களின் ஆதரவும், ஆசீர்வாதமும் தொடர்ந்து கிடைக்க வேண்டும்" - நயன்தாரா

திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக இன்று நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.;

Update: 2022-06-11 11:09 GMT

செங்கல்பட்டு,

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடந்தது. இதனை தொடர்ந்து கடந்த 9-ந்தேதி நயன்தாரா, விக்னேஷ் சிவன் கோலாகல திருமணம், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இவர்களது திருமணத்திற்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் வருகை தந்து மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள். இதனையடுத்து நேற்று நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் ஜோடியாக சென்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக இன்று நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நயன்தாரா, "எங்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. நாங்கள் தற்போது திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு உங்களின் ஆதரவும், ஆசீர்வாதமும் தொடர்ந்து கிடைக்க வேண்டும்" என கேட்டுகொண்டார்.

தொடர்ந்து பேசிய விக்னேஷ் சிவன், "இந்த இடத்தில் தான், நான் கதை கூற நயன்தாராவை முதன்முதலில் சந்தித்தேன். அதன் காரணமாகவே இந்த நிகழ்வை இங்கு நடத்த விரும்பினோம்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்