நீங்கள் இல்லாமல் நாங்கள் ஒன்றுமில்லை - சத்குரு குறித்து கங்கனா உருக்கம்

சத்குரு நன்றாக இருக்க வேண்டும் இல்லையெனில் சூரியன் உதிக்காது, பூமி நகராது என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-21 07:35 GMT

சென்னை,

சமீபத்தில் வந்த மகாசிவராத்திரி விழா ஈஷா மையத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் கோவை ஈஷா மையத்தின் நிறுவனரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்று இருந்தார். மேலும் நடிகர், நடிகைகள் உள்பட பல துறை பிரபலங்கள் விழாவில் பங்கேற்றிருந்தனர்.

இந்த சூழலில் தலைவலி காரணமாக ஜக்கி வாசுதேவ், டாக்டர் வினித் சூரியிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டது. அதில் சத்குருவின் மூளையில் ரத்தப்போக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனையடுத்து சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார். இருப்பினும் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அவர் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். தற்போது அவர் நலமாக இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சத்குரு விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

"இந்த விஷயம் குறித்து அறிந்ததிலிருந்து நான் உணர்ச்சியற்றவளாக இருக்கிறேன். இந்த கடுமையான வலியுடன் சத்குரு, பிரமாண்டமான சிவராத்திரி நிகழ்வை தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல், எந்தவொரு கூட்டத்தையும் அல்லது சந்திப்பையும் கூட தவிர்க்கவில்லை. விரைவில் குணமடையுங்கள். நீங்கள் இல்லாமல் நாங்கள் ஒன்றுமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல மற்றொரு பதிவில், " சத்குரு ஐ.சி.யூ. படுக்கையில் இருப்பதை பார்த்தபோது, திடீரென்று அவரது இருப்பு குறித்த உண்மை என்னைத் தாக்கியது. இதற்கு முன் அவரும் நம்மைப்போல் எலும்பு, ரத்தம், சதை கொண்ட ஒரு மனிதன் என்று எனக்கு தோன்றியதே இல்லை. கடவுளே நிலைகுலைந்து விட்டதைப்போல உணர்ந்தேன், பூமி இடம்பெயர்ந்து விட்டதைப் போலவும், வானம் என்னை கைவிட்டுவிட்டதைப் போலவும் உணர்ந்தேன், என் தலை சுற்றுவதைப் போல உணர்கிறேன்.

இந்த எதார்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முதலில் இதை நம்ப வேண்டாம் என்று முடிவு செய்தேன். பின்னர் திடீரென்று நான் உடைந்து அழுதேன். இன்று லட்சக்கணக்கான மக்கள் என்னுடன் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். எனது வலியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் நன்றாக இருக்க வேண்டும், இல்லையெனில் சூரியன் உதிக்காது, பூமி நகராது. இந்த தருணம் உயிரற்ற நிலையில் உறைந்திருக்கிறது" என்று கங்கனா பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்