மதத்தை ஆயுதமாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள்- நடிகை பார்வதி திருவோத்து
மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் மலையாள நடிகை பார்வதி திருவோத்து மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
"பூ" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி திருவோத்து. தனது 17 வருட சினிமா வாழ்வில் தமிழில், விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மலையாளத்தில் நல்ல கதைகளைத் தேர்வு செய்து சிறப்பாக நடித்து வருகிறார். சினிமா மட்டுமல்லாது சினிமாவில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள், சமூகபிரச்சினைகள் என அனைத்துக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
தொடர்ந்து சென்னையில் ஒரு நாள் , மரியான் உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார் . பார்வதி திருவோத்து பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கேரளாவில் 20 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை பார்வதி திருவோத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "வெறுப்புக்கு எதிராகவும் வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவும் மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகவும் வாக்களியுங்கள்" என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.