பிரபுதேவாவின் 'காதலன்' பட பாடலுக்கு நடனமாடி அசத்திய 'பாகுபலி' பட டைரக்டர்
தெலுங்கு சினிமாவின் மாஸ் இயக்குனர்களில் ஒருவரான ராஜமெளலி, பிரபுதேவாவின் ஹிட் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வைரலாக்கி வருகின்றனர்.;
ராஜமவுலி இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் 'நாட்டு நாட்டு' பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபுதேவாவின் 'காதலன்' படத்தில் இடம்பெற்ற 'காதலிக்கும் பெண்னின் உள்ளம்...' பாட்டிற்கு டான்ஸ் கிளாஸில் உற்சாகமாக நடனம் ஆடியுள்ளார் ராஜமவுலி.
இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர். 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை அடுத்து இப்போது மகேஷ் பாபுவுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார் ராஜமவுலி. இதற்கான அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. இதற்கான திரைக்கதைப் பணியில் பிஸியாக இருப்பவர் இதற்கிடையில் நடனமாடி ரிலாக்ஸ் செய்திருக்கிறார். மகேஷ் பாபுவுடனான படம் முடித்துவிட்டு அடுத்து 'ஆர்.ஆர்.ஆர்.2' ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது.