மம்முட்டியுடன் நடிக்கும் விஜய் சேதுபதி
புதிய படமொன்றில் மம்முட்டியும் விஜய்சேதுபதியும் இணைந்து நடிக்க உள்ளதாகவும் மணிகண்டன் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.;
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஜய்சேதுபதி இமேஜ் பார்க்காமல் மற்ற நடிகர்களுடன் இணைந்தும் நடித்து வருகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோர் படங்களில் வில்லனாக வந்தார். தெலுங்கு, மலையாளம், இந்தி பட வாய்ப்புகளும் வருகின்றன. காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம், மாமனிதன் ஆகிய படங்கள் விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து திரைக்கு வந்துள்ளன. தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் சூரியுடன் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் ஷாருக்கானின் ஜவான் படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேரி கிறிஸ்துமஸ், மும்பைக்கார் ஆகிய மேலும் 2 இந்தி படங்களும் கைவசம் உள்ளன. தெலுங்கில் மைக்கேல் படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் அடுத்து புதிய படமொன்றில் மம்முட்டியும் விஜய்சேதுபதியும் இணைந்து நடிக்க உள்ளதாகவும் மணிகண்டன் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய படங்களை மணிகண்டன் இயக்கி உள்ளார்.