கேரளாவையே அதிர வைத்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி வீடியோ வைரலாகி வருகிறது.;
திருவனந்தபுரம்,
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் கேரளாவுக்கு சென்றதில் இருந்தே ரசிகர்கள் அவரைக் காண கூட்டமாக அலைமோதி வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக நடிகர் விஜய்யை பார்க்க படப்பிடிப்பு தளத்திலும், செல்லும் இடங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடிகர் விஜய் வாகனத்தின் மீது நின்று, ரசிகர்களிடம் பேசினார்.
அப்போது கேரள ரசிகர்கள் மத்தியில் மலையாளத்தில் பேசி அசத்தினார். அதில் ஓணம் பண்டிகையின் போது நீங்கள் எந்த அளவுக்கு சந்தோசமாக இருப்பீர்களோ, அந்த அளவுக்கு உங்களின் முகத்தை பார்க்கும் பொழுது எனக்கு சந்தோசமாக உள்ளது. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்! நீங்க வேற லெவல் என கேரள ரசிகர்களிடம் விஜய் பேசினார்.
இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இதைத் தொடர்ந்து விஜய் செல்லும் இடங்களுக்கு எல்லாம் கேரள ரசிகர்கள் பைக்கில் பின் தொடர்ந்து வந்தனர்.
விஜய்க்கு அணிவிக்க ரசிகர்கள் மாலை வாங்கி வந்த நிலையில் அவர்கள அன்பை விஜய் ஏற்றுக் கொண்டார். மேலும் நள்ளிரவு 2 மணிக்கு தங்கும் ஓட்டலுக்கு வந்த விஜய்யை அவரது ரசிகர்கள் குவிந்து ஆரவாரம் எழுப்பினர். அப்போது, நீங்க இன்னும் தூங்கலயாடா என்று அக்கறையுடன் கேட்டார் விஜய். இவை தொடர்பான வீடியோக்கள் கடந்த 2 நாட்களாக சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்பி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. தி கோட் படத்திற்காக விஜய் கேரளாவில் தங்கியுள்ள நாட்களெல்லாம் திருவிழா போல் மாறியுள்ளதாக பிரபலங்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.