விக்னேஷ் சிவன் இயக்கும் 'எல்.ஐ.சி' படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு
விக்னேஷ் சிவன் இயக்கும் ‘எல்.ஐ.சி’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.;
சென்னை,
இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருந்தாலும் நானும் ரவுடி தான் என்ற படம்தான் விக்னேஷ் சிவனுக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. இவர் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது 'எல்.ஐ.சி.' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் லவ் டுடே படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கோவை ஈஷா யோகா மையத்தில் ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் தொடங்கியது.
இதற்கிடையே தனது படத்தின் தலைப்பை விக்னேஷ் சிவன் பயன்படுத்தி உள்ளதாக இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். மேலும் எல்.ஐ.சி நிறுவனம் படத்தின் பெயரை மாற்றக் கோரி செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் இந்த படத்தின் பெயரை விக்னேஷ் சிவன் மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் 'எல்.ஐ.சி' படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வருகின்ற ஜூலை 25-ம் தேதி பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி அளவில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.