'என் வாழ்நாளில் மறக்கமாட்டேன்' - மாநாடு திரைப்படம் குறித்து மனம் திறந்த வெங்கட் பிரபு
மாநாடு திரைப்படம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
சென்னை,
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாநாடு'. இந்த திரைப்படம் தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த சிம்புவிற்கு திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பலரின் பாராட்டுகளை பெற்றது.
இந்நிலையில் மாநாடு திரைப்படம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதனை தெரிவிக்கும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு படம் குறித்து நெகிழ்ச்சி பதிவை பதிவிட்டுள்ளார்.
அவர் அந்த பதிவில், 'என்ன ஒரு அனுபவம் இந்தப் படத்தை எடுத்தது. இதை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. இந்த படத்தை வெளியிட உதவியவர்களுக்கும் எனது நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.