சோழிங்கநல்லூரில் போலீஸ்காரர் மீது காரை ஏற்றிய டி.வி. நடிகை

சோழிங்கநல்லூரில் போலீஸ்காரர் மீது காரை ஏற்றிய டி.வி.நடிகை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2024-02-28 03:23 GMT

சோழிங்கநல்லூர்,

பிரபல டி.வி.நடிகை மதுமிதா. எதிர்நீச்சல் டி.வி. தொடரில் நடித்து வரும் மதுமிதா தனது ஆண் நண்பருடன் தன்னுடைய காரில் சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் சோழிங்கநல்லூரில் உள்ள பிரபலமான கோவிலுக்கு சென்று விட்டு ஒரு வழிபாதையில் வந்து அக்கரை வழியாக கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்ல முற்பட்டார். திடீரென நடிகையின் கார் செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் எழுத்தராக வேலை பார்க்கும் ரவிக்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரவிக்குமார் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் காரில் வந்தவர்களை விசாரணை செய்ததில் டி.வி. நடிகை மதுமிதா என்பது தெரியவந்தது. அப்போது மதுமிதா தங்கள் மீது தவறு இல்லை. போலீஸ்காரர்தான் வேகமாக வந்தார் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதையடுத்து மதுமிதா மற்றும் அவருடன் வந்த ஆண் நண்பர் இருவரையும் முதல் கட்டமாக மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி வந்தனரா? என போக்குவரத்து போலீசார் சோதித்துள்ளனர். இல்லை என தெரியவந்ததும் காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

மதுமிதா மீது பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், சிறு காயங்கள் ஏற்படுத்துதல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காயம் அடைந்த ரவிக்குமார் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். கர்நாடகாவை சேர்ந்த மதுமிதாவுடன் காரில் பயணம் செய்த ஆண் நண்பர் கேரளாவை சேர்ந்தவர் என்பதும் சென்னையில் ஐ.டி. துறையில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்