திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாணுக்கு மீண்டும் பதிலளித்த பிரகாஷ் ராஜ்
30ந் தேதிக்கு பிறகு உங்களின் அனைத்து கேள்விக்கும் பதில் அளிக்கிறேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.;
ஐதராபாத்,
திருப்பதி லட்டு விவகாரத்தில் 'சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம்' என்ற அமைப்பை நிறுவ வேண்டும் என ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் கூறியதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ், நீங்கள் துணை முதல்-மந்திரியாக இருக்கும் மாநிலத்தில்தான் இந்த பிரச்சினை நடந்துள்ளது.
தயவு செய்து விசாரித்து, குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுங்கள். இப்பிரச்சினையை ஏன் தேசிய அளவில் பெரிதாக்கி அச்சத்தை பரப்புகிறீர்கள். நாட்டில் ஏற்கெனவே போதுமான அளவு வன்முறை பதற்ற சூழல் உள்ளது. மத்தியில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு நன்றி எனக் கூறியிருந்தார்.
இதற்கு பவன் கல்யாண், நடிகர் பிரகாஷ் ராஜை கடுமையாக விமர்சித்திருந்தார். எங்களின் உணர்வுகளை கேலி செய்ய வேண்டாம். இந்த சம்பவம் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அப்படி கிடையாது. இது ஆழமான வலியை தந்துள்ளது. சனாதன தர்மத்தை பற்றி பேசுவதற்கு முன்பு 100 முறை யோசித்து பேசுங்கள் என்றார்.
இதற்கு பதிலடியாக பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
டியர் பவன் கல்யாண் அவர்களே, உங்களது செய்தியாளர் சந்திப்பைப் பார்த்தேன். நான் கூறியதை தவறாகப் புரிந்துக்கொண்டு நீங்கள் பேசியது வியப்பாக இருக்கிறது. வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறேன். அதை முடித்துவிட்டு 30ந் தேதிக்கு பிறகு உங்களது ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கிறேன். அதற்குள், எனது பழைய பதிவுகளைப் பார்த்தால் உங்களுக்குப் புரியுமென நினைக்கிறேன் என்றார்.