நான் கதாநாயகனாக நடித்து ஜெயிப்பது கஷ்டம் என்றனர் -'லவ் டுடே' நாயகன் பிரதீப்

நான் கதாநாயகனாக நடித்து ஜெயிப்பது கஷ்டம் என பலர் பேசினர் என்று படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் ‘லவ் டுடே’ நாயகன் பிரதீப் தெரிவித்தார்.

Update: 2023-02-16 02:32 GMT

ஜெயம் ரவி நடித்து 2019-ல் வெளியான 'கோமாளி' படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் 'லவ் டுடே' படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இந்த படம் வெற்றிகரமாக ஓடி 100 நாட்களை கடந்து உள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சென்னையில் நடந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் பங்கேற்று பேசும்போது, "லவ் டுடே படத்தில் கதாநாயகனாக நடிக்க நான் விரும்பியதும் பலர் தயங்கினர். ஹீரோவாக ஜெயிப்பது கஷ்டம் என்றனர். ஹீரோவாக எதற்கு நடிக்கிறாய் என்றும் பேசினர். படம் தோற்று கீழே விழுந்தால் திரும்ப எழுவது கஷ்டம் என்பதும் நிறைய பேர் கேலி செய்வார்கள் என்பதும் எனக்கும் புரிந்தது.

ஆனாலும் மலை ஏற மற்ற உபகரணங்களை விட மலை முக்கியம் என்று கருதினேன். லவ் டுடே கதையை மலையாக நம்பி அதில் ஏறினேன். வெற்றி கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் லவ் டுடே வசூல் ஈட்டி உள்ளது.

அறிமுக நாயகனாக நான் இருந்தாலும் கதையின் மீது நம்பிக்கை வைத்து 'லவ் டுடே' படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாத்திக்கு நன்றி. என்றைக்கும் இதை மறக்க மாட்டேன். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறீர்கள் என்றால் மலை ஏறிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்