சிங்கிள் ஷாட் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட 'ரத்னம்' படக்குழு
'ரத்னம்' படத்தின் சிங்கிள் ஷாட் மேக்கிங் வீடியோவை தற்பொழுது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.;
நடிகர் விஷால் ஹரி இயக்கும் ரத்னம் படத்தில் நடித்துள்ளார். நாளை இப்படம் வெளியாக உள்ளது. விஷால் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் மூன்றாவது முறை இணைந்து நடித்துள்ளார். இதற்கு முன் அவரது இயக்கத்தில் தாமிரபரணி மற்றும் பூஜை படத்தில் நடித்துள்ளார். ரத்னம் திரைப்படம் விஷாலுக்கு 34- வது திரைப்படமாகும்.
பிரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தை ஸ்டோன் பென்ச் சார்பாக கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு படத்தின் பாடல்கள் வெளியாகியது அதைத்தொடர்ந்து படத்தின் டிரெயிலர் வெளியாகியது. ஆந்திரா மற்றும் தமிழ்நாடு பார்டரில் கதைக்களம் நடப்பதுப் போல் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
படத்தின் பாடல் மற்றும் டிரெயிலர் மக்களிடயே நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தாமிரபரணி மற்றும் பூஜை படத்தைப் போல் இப்படமும் விஷாலுக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் சிங்கிள் ஷாட் காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. அதனுடைய மேக்கிங் வீடியோவை தற்பொழுது வெளியிட்டுள்ளனர். அதில் படக்குழுவினரான ஹரி, தேவி ஸ்ரீ பிரசாத், ஒளிப்பதிவாளர் சுகுமார், ஸ்டண்ட் இயக்குனர் கனல் கண்ணன் பேசியுள்ளனர்.
படத்தில் ஒரு 5 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியை எந்தவித கம்பியூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் எடுத்துள்ளனர். திருப்பதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மூன்று நாட்கள் மிக கஷ்டப்பட்டு இந்த காட்சியை படமாக்கியுள்ளனர். மக்களிடையே இந்த காட்சியை திரையில் காண்பதற்கு பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.