ஓட்டுக்குப் பணம் கேடு என சொல்லும் "பொதுநலவாதி" ஆல்பம் பாடல் வெளியீடு

சமூக நலனுடன் உருவாகியுள்ள "பொதுநலவாதி" ஆல்பம் பாடலை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் அவனியாபுரம் மாசாணம்.

Update: 2024-04-02 06:45 GMT

சென்னை,

அவனியாபுரம் மாசாணம் வழங்கும், இசைத்தமிழன் ரியாஸ் காதிரி இசையில், அந்தோணிதாசன் குரலில், ஓட்டுக்குப் பணம் பெறுவது எத்தகைய இழிசெயல், கேடு என்பதைச் சொல்லும், விழிப்புணர்வு பாடலாக உருவாகியுள்ள ஆல்பம் பாடல் "பொதுநலவாதி". சமூக நலனுடன் உருவாகியுள்ள இப்பாடலை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் அவனியாபுரம் மாசாணம். இப்பாடலில் பாண்டிகமல், சத்யா, ஹலோ கந்தசாமி, இசைத்தமிழன் ரியாஸ் காதிரி ஆகியோர் நடித்துள்ளனர்.

தேர்தல் நேரத்தில் எங்கும் பணம் புழங்கிக்கொண்டிருக்கிறது. மக்கள் இன்று ஓட்டுக்குப் பணம் வாங்கினால் நாளை அவர்கள் வாழ்வு மட்டுமல்லாது, நாட்டின் எதிர்காலமே எப்படிப் பாதிக்கப்படும் என்பதை, அழுத்தமாகச் சொல்லும் அற்புதமான பாடலாக, பொது நலவாதி பாடல் உருவாகியுள்ளது.

இப்பாடலின் வெளியீட்டு விழா, பாடலின் படைப்பாளிகள் குழுவினருடன், சமூக செயல்பாட்டாளர்கள், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பாடகர் அந்தோணி தாசன் கலந்துகொண்டு பேசியதாவது,

மேடையை அலங்கரிக்கும் மூத்தவர்களுக்கு நாட்டுப்புற கலைஞனாக என் வணக்கம். இரண்டு பேரின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றிவிழாதான் இது. மாசாணம், ரியாஸ் காதிரி இருவருடனும் இரண்டு மாதங்களாக இப்பாடலுக்காகச் சேர்ந்து உழைத்துள்ளேன். ரியாஸ் அண்ணன் பெரிய திறமைசாலி, பாடுவார், பாடல் எழுதுவார், மதுரையில் ஒரு ஸ்டுடியோ வைத்துள்ளார்.

திரைத்துறையில் வெற்றிப் பெறுவதற்காக போராடிக்கொண்டிருக்கிறார் அவர் கண்டிப்பாக ஜெயிப்பார். மாசாணம் தன் சொந்தப்பணத்தைப் போட்டு அரசாங்கம் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள். பாடலும் ஒளிப்பதிவும் சிறப்பாக வந்துள்ளன. ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள், ஓட்டை மதித்து பயன்படுத்துங்கள், நன்றி. இவ்வாறு பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்