பெண் நிருபர் விவகாரம்; தந்தையை போல் மன்னிப்பு கோருகிறேன் - நடிகர் சுரேஷ் கோபி
பெண் நிருபர் மீது கை வைத்த விவகாரத்தில் ஒரு தந்தையை போல் மன்னிப்பு கோருகிறேன் என நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்து உள்ளார்.
கோழிக்கோடு,
கேரளாவில் பிரபல நடிகர் மற்றும் பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யான சுரேஷ் கோபி கோழிக்கோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பெண் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு கோபி பதிலளிக்கும்போது, மகளே (மோலே) என கூறி நிருபரின் தோள் மீது கை வைத்துள்ளார். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்தது.
அவரது இந்த செயலால், அந்த பெண் நிருபர் பின்னால் நகர்ந்து சென்றார். இதன்பின், 2-வது கேள்வியை அந்த பெண் நிருபர் கேட்டுள்ளார். அப்போதும், அவருடைய தோள் மீது தன்னுடைய கையை கோபி வைத்திருக்கிறார். இந்த முறை அவருடைய கையை பெண் நிருபர் தள்ளி விடும் காட்சிகள் காணப்படுகின்றன.
இந்த வீடியோ வைரலானதும் பரபரப்பானது. இந்நிலையில், நடிகர் சுரேஷ் கோபி சமூக ஊடகம் வழியே வெளியிட்ட பதிவில், நட்பு ரீதியிலேயே அந்த பெண் நிருபரிடம் நடந்து கொண்டேன். அவர் அதனை தவறாக எண்ணினார் என்றால், அவருடைய உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.
அவர் இதனை மோசம் என உணருவார் என்றால், அவரிடம் இதற்காக மன்னிப்பு கோருகிறேன். வருந்துகிறேன்... என பதிவிட்டு உள்ளார். தொடர்ந்து கோபி, அந்த பெண் நிருபர் எனது வழியை பல முறை தடுத்ததும், அவரை ஒரு பக்கம் நகர்த்த முயன்றேன். நான் ஒரு தந்தை. அவரிடம் ஒரு தந்தையை போன்று மன்னிப்பு கோர தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.
எனினும், பெண் நிருபர் கூறும்போது, அவர் கேட்டுள்ள மன்னிப்பு, மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக விளக்கம் அளிப்பது போன்று உள்ளது. அவருக்கு எதிராக சட்ட ரீதியாக அணுக உள்ளேன் என்று கூறியிருக்கிறார்.
கேரள பத்திரிகையாளர்கள் அமைப்பின் மாநில தலைவர் வினீதா மற்றும் பொது செயலாளர் கிரண் பாபு ஆகியோர், தவறை ஒப்பு கொண்டு சுரேஷ் கோபி மன்னிப்பு கேட்க வேண்டும் என அதுபற்றி வெளியிட்ட ஊடக செய்தியில் தெரிவித்து உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
அவருக்கு எதிராக வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்படும் என தெரிவித்தது. பத்திரிகை தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து பெண்களுக்கும் ஏற்பட்ட அவமதிப்பு இது என்றும் பிற சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் பற்றி கோழிக்கோடு நகர ஆணையாளரிடம் புகார் ஒன்றையும் அந்த பெண் நிருபர் அளித்துள்ளார்.