மக்களை கட்டிப்போட்ட சினிமா கொட்டகை: கோவை நாஸ்

Update: 2023-05-18 09:01 GMT

கோவை உக்கடம் பகுதியில் ஆங்கிலேயர்கள் காலத்தில் `பால்ரூம்' என்ற பெயரில் ஓர் அரங்கம் இயங்கிவந்தது. கேளிக்கை விடுதியாகச் செயல்பட்ட அந்த அரங்கில் ஆணும், பெண்ணும்மாலைப் பொழுதில் கூடிப்பாடிக் களித்து வந்தனர்.

இரவில் `குரூப் டான்ஸ்' என்று அழைக்கக் கூடிய குழுநடனங்களை ஆங்கிலேயர்கள், அங்கே ஆடி மகிழ்ந்தனர்.

1934-ம் ஆண்டு, பால்ரூம் விலைக்கு வந்தது. கோவை வெரைட்டி ஹால் தியேட்டரை நடத்தி வந்த சாமிக்கண்ணு வின்சென்ட் அதை வாங்கி, அதற்கு 'பேலஸ்' என்று பெயரிட்டு சினிமாப் படங்களைத் திரையிட்டு வந்தார்.

1956-ம் ஆண்டு அந்தத் தியேட்டரை கொச்சியைச் சேர்ந்த தொழில் அதிபரான ராய்ஹாகிப் ஜோகர் என்பவர் வாங்கினார். அவரது பூர்வீகம் ராஜஸ்தான் மாநிலம்.

அவர் வாங்கியப் பிறகு `பேலஸ்' என்ற தியேட்டர் பெயரை, `நாஸ்' என்று மாற்றி தொடர்ந்து இந்திப் படங்களை திரையிட்டு வந்தார்.

1976-ம் ஆண்டு அந்தத் தியேட்டர் வேறு ஒருவருக்கு கைமாறியது. அதாவது கோவையில் நகை வியாபாரம் செய்து வந்த பி.சுப்பிரமணியம் என்பவர் அதை விலைக்கு வாங்கினார்.

தியேட்டர்களில் அவர் சில மாற்றங்களைச் செய்தார். புதுப்பிக்கப்பட்ட நாஸ் தியேட்டரின் திறப்புவிழா 1976-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி நடந்தது.

அப்போது தமிழ்ப் படங்களில் முன்னணிக் கதாநாயகியாக வலம்வந்த நடிகை ஸ்ரீபிரியா தியேட்டரை திறந்துவைத்தார்.

ஸ்ரீபிரியா, தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யக் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருக்கிறார். நாஸ் தியேட்டரின் பழைய நினைவுகள் பற்றி அவரிடம் கேட்டோம். அவர் வியப்படைந்தார்.

"நான் திரைப்பயணத்தை தொடங்கியது 1974-ம் ஆண்டில்தான். ஆனால் 1976-ம் ஆண்டில் கோயம்புத்தூரில் உள்ள புதுப்பிக்கப்பட்ட நாஸ் தியேட்டரை திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது எனக்கு மிக பெருமையான விஷயம். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டு வருவது வருத்தம் அளிக்கும் வேளையில், இன்னும் இந்த நாஸ் தியேட்டர் கம்பீரம் குறையாமல் செயல்பட்டு வருகிறது. இது மனதுக்கு நிறைவான விஷயமாக இருக்கிறது. இந்த தியேட்டர் இன்னும் பல ஆண்டு காலம் நிலைத்து நிற்கவேண்டும். மென்மேலும் வளர்ந்து பொதுமக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை தந்திட வேண்டும். நல்ல திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும். இதுவே எனது விருப்பம்." என்றார், ஸ்ரீபிரியா.

நாஸ் தியேட்டரில் அவ்வப்போது தமிழ்ப் படங்களும் திரையிடப்பட்டு வருகின்றன. தொடர்ந்து சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.

தற்போது தியேட்டரை சுப்பிரமணியத்தின் மகன்கள் டாக்டர் தினேஷ்பாபு, விஜயகுமார் ஆகியோர் நிர்வகித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்