புதுக்கோட்டை நகருக்கு ஓர் அடையாளமாகவும், முகவரியாகவும் இருந்தது பழனியப்பா டாக்கீஸ். குறைந்த கட்டணத்தில் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று விளங்கியது.
புதுக்கோட்டை மேல ராஜவீதியில் `ராஜா டாக்கீஸ்' என்ற பெயரில் ஆரம்ப காலத்தில் ஒரு தியேட்டர் இயங்கியது. 1945-ம் ஆண்டு அதை அரிமளத்தைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார் விலைக்கு வாங்கினார். அதை அவர், இடித்துவிட்டு பக்கத்தில் தனது இடத்துடன் சேர்த்து 28 ஆயிரம் சதுரடி பரப்பளவில் புதிதாக ஒரு திரையரங்கைக் கட்டினார். அதுதான், `பழனியப்பா டாக்கீஸ்'.
தியேட்டர் முழுக்க, முழுக்க சுண்ணாம்பை பயன்படுத்தி கட்டப்பட்டது. பர்மாவில் இருந்து கொண்டுவரப்பட்ட, தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டன.
புதுக்கோட்டையில் பால்கனியுடன் கட்டப்பட்ட திரையரங்கம் என்ற பெருமை அதற்கு உண்டு.
965 இருக்கைகள். ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புரொஜக்டர் கருவிகள். வெளிநாட்டு மின் விளக்குகள். டிக்கெட் கவுண்ட்டர்களில் தடுப்புவேலி அமைக்க மும்பையில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட இரும்பு கம்பிகள் என்று ரசிகர்களை கவரும் வகையில் தியேட்டர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
1953-ம் ஆண்டு மே மாதம் 17-ந் தேதி புதுக்கோட்டையில் அந்தப் புதிய திரையரங்கம் திறக்கப்பட்டது. அப்போதைய சப்-கலெக்டர் எஸ்.பி.சீனிவாசன் திறந்துவைத்தார்.
திறப்பு விழாவின் போது பழனியப்பா டாக்கீசில் `கல்யாணம் பண்ணிப்பார்' என்ற படம் திரையிடப்பட்டது. நகைச்சுவையான அந்தப் படத்தில் நடிகர்கள் என்.டி.ராமராவ், பத்மநாபன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நாடோடி மன்னன் அங்கு தொடர்ந்து 138 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
வெற்றி விழாவிற்கு எம்.ஜி.ஆர். புதுக்கோட்டை வந்திருந்தார். விழா முடிந்ததும் பழனியப்ப செட்டியார் வீட்டில் மதிய விருந்தில் கலந்துகொண்டார். இதேபோல் வேறு இருமுறைகளும் பழனியப்பா திரையரங்கத்திற்கு எம்.ஜி.ஆர். வந்திருக்கிறார். ரவிச்சந்திரன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட நடிகர்களும் பழனியப்பா திரையரங்கத்திற்கு வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்கள். திரைப்படமும் பார்த்திருக்கிறார்கள்.
கடந்த 1989-ம் ஆண்டு `காம்பவுன்டு டாக்ஸ்' முறையால், வரிச் செலுத்த முடியாமல் திரையரங்கத்தில் இருக்கைகள் 666 ஆக குறைக்கப்பட்டனவாம். ஏ.சி. வசதி செய்யப்படாததால், இந்தத் திரையரங்கத்தில் கடைசி வரை டிக்கெட் கட்டணம் ரூ.1, ரூ.4, ரூ.10 வரைத்தான் இருந்துள்ளது. கட்டணம் குறைவு என்பதால் ரசிகர்களின் வருகை அதிகமாகவே இருந்திருக்கிறது. கடந்த 1959-ம் ஆண்டு பெரும் மழையும், புயலும் தாக்கியது. புதுக்கோட்டையில் பல இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்தன. ஆனால் பழனியப்பா திரையரங்க கட்டிடத்திற்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லையாம். அவ்வளவு கம்பீரமான இந்த கட்டிடத்திற்கு கண்திருஷ்டி விழுந்து விடுமோ என்று கருதி திரையரங்க நிர்வாகத்தினரே முகப்புப் பகுதியில் லேசாக இடித்து விட்டனராம்!
பழனியப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட இந்தத் திரையரங்கத்தை அவருடைய பேரன் ஆர்.எம்.சுப்பையா செட்டியார் நிர்வகித்து வந்துள்ளார். அதன்பின் ஆர்.எம்.சுப்பையாவின் மகனான எஸ்.பி. பழனியப்பன் கடந்த 1989-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை நிர்வகித்து வந்திருக்கிறார்.
2003-ம் ஆண்டில் நடிகர் விஜய் நடித்த வசீகரா திரைப்படம் ரிலீசானது. அது பழனியப்பாவில் 45 நாட்கள் ஓடியது. அதன்பிறகு திரையரங்கம் ஓடவில்லை. வேறு ஒருவருக்கு விற்கப்பட்டது. பழமையான அந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டது. இடிக்கும் போது எளிதில் பணி முடியவில்லையாம். கட்டிடங்கள் உறுதியாக இருந்ததால் மிகவும் சிரமத்தோடு இடித்து அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். அதில் இருந்த பொருட்கள் பல லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டதாம்.
தற்போது காலியிடமாக கிடக்கிறது. அதனைத் தனியார் நிறுவனத்தினர் வாகனங்கள் நிறுத்துமிடமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் புதுக்கோட்டை மக்கள் மனதில் பழனியப்பா திரையரங்கம் பெயர் இன்றளவும் விளங்கி வருகிறது. அந்தப் பகுதி பஸ் நிறுத்தம் 'பழனியப்பா முக்கம்' என்றே அழைக்கப்பட்டு வருகிறது.