இடைவிடாமல் கைதட்டிய பார்வையாளர்கள்... சர்வதேச அரங்கில் வரவேற்பை பெற்ற 'விடுதலை'

கடந்த மாதம் 25ம் தேதி நெதர்லாந்தில் 53வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழா தொடங்கியது.

Update: 2024-02-01 09:46 GMT

சென்னை,

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விடுதலை பாகம் 1'. இந்த படம் கடந்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து இருந்தனர்.

இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகள் இடம்பெற்று படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறவைத்தது. நடிகை மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கடந்த மாதம் 25ம் தேதி நெதர்லாந்தில் 53வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழா தொடங்கியது. இதில் பங்கேற்க வெற்றிமாறன் இயக்கிய 'விடுதலை' படமும் ராம் இயக்கிய 'ஏழு கடல் ஏழு மலை' படமும் தேர்வு செய்யப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக வெற்றிமாறன், ராம், விஜய் சேதுபதி, சூரி, நிவின் பாலி, அஞ்சலி உள்ளிட்ட படக்குழுவினர் நெதர்லாந்திற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் 'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்களும் இந்த விழாவில் திரையிடப்பட்டது. படங்களை பார்த்த பார்வையாளர்கள் எழுந்து நின்று தொடர்ந்து 5 நிமிடங்கள் கைதட்டி பாராட்டியுள்ளனர். இதுகுறித்த வீடியோவை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சர்வதேச அரங்கில் கிடைத்த இந்த வரவேற்பால் படக்குழு மிகுந்த உற்சாகமடைந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்