நீண்ட இடைவேளைக்குப் பின்னர் கம்பேக் கொடுத்த ஜனகராஜ்
நடிகர் ஜனகராஜ் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிப்புத் துறைக்கு திரும்பியிருக்கிறார். 'தாத்தா' என்ற குறும்படத்தில் அவர் நடித்திருக்கிறார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
'கிழக்கே போகும் ரயில்', 'விக்ரம்', 'குணா' உள்ளிட்ட ஏராளமானப் படங்களில் நடித்தவர் ஜனகராஜ். நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர். விஜய்சேதுபதியின் '96', சாருஹாசனின் 'தாதா 87' உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் இடையில் சினிமாவுக்கு பிரேக் கொடுத்தார்.
ஒரு கட்டத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து ஓய்வு பெற்ற ஜனகராஜ், தனது ஒரே மகனுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என்று அனைவருமே நம்பிவிட்டனர். அவர் இறந்துவிட்டார் என்றும் ஒரு வதந்தி கிளம்பியது. நான் சென்னையில் உயிரோடு தான் உள்ளேன் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் ஜனகராஜ். மேலும் இவர் விஜய் சேதுபதியின் 96 படத்தில் ஸ்கூல் வாட்ச்மேனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படியான சூழ்நிலையில்தான், 'தாத்தா' என்ற குறும்படம் மூலமாக நடிப்புக்கு மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார் ஜனகராஜ். வீட்டு காவலாளியாக பணிபுரியும் ஜனகராஜ் தனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். அப்போது ஒருநாள் வீட்டிற்கு வரும் பேரனின் வருகை அவரை சந்தோஷப்படுத்துகிறது. எப்போதாவது வீட்டிற்கு வரும் பேரன் ஆசைப்பட்டு பொம்மை கார் கேட்கிறான்.
அந்த கார் 800 ரூபாய் என்கிறார்கள். அதை வாங்குவதற்காக பல வருடங்களாக தான் ஆசையாய் வைத்திருக்கும் ஒரு பொருளை விற்க முடிவு செய்கிறார் ஜனகராஜ். அதை அவர் செய்தாரா? பேரனின் ஆசையை நிறைவேற்றினாரா என்பது தான் 'தாத்தா' கதை. நெகிழ்வான தருணங்களோடு கதையை நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குநர் நரேஷ்.
நீண்ட நாள் கழித்து ஜனகராஜைப் பார்த்த ரசிகர்கள் அவரது புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
'நைனா..' 'தங்கச்சிய நாய் கடிச்சுருச்ச..,' 'என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா.., 'போன்ற இவர் பேசிய நகைச்சுவை வசனங்கள் இன்றும் பல மீம்களுக்கு தீனி போடுகிறது.