விஜயகாந்த் படத்தின் கதையை திருடி இந்தி படமா? பட அதிபர் சங்கம் விசாரணை
அட்லி இந்தியில் இயக்கும் ஜவான் படம் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு படம் கதையின் தழுவல் என்று வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியில் ஷாருக்கான் 'ஜவான்' என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தமிழில் ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான அட்லி டைரக்டு செய்து வருகிறார். நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். விஜய்சேதுபதி வில்லனாக வருகிறார். விஜய் கவரவ தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜவான் திருட்டு கதை சர்ச்சையில் சிக்கியது. விஜயகாந்த் நடிப்பில் 2006-ல் வெளியான பேரரசு கதையை தழுவி ஜவான் படத்தை எடுப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பானது.
ஜவான் படம் பேரரசு படத்தின் கதை என்று வெளியாகி உள்ள தகவல் குறித்து விசாரிக்க வேண்டும் என்று பட அதிபர் மாணிக்கம் நாராயணன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர் தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, ''பேரரசு படத்தை காஜாமொய்தீன் தயாரித்து இருந்தார். எனவே கதையின் உரிமை அவரிடம் இருக்கிறதா? அல்லது மாணிக்கம் நாராயணனிடம் இருக்கிறதா என்று விசாரித்து வருகிறோம். ஜவான் படம் பேரரசு படத்தின் கதை என்பதற்கு ஆதாரம் உள்ளதா என்றும் விளக்கம் கேட்கப்படும். ஜவான் படத்தை பார்த்த பிறகே இந்த பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்க முடியும்" என்றார்.