நடிகரின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆன்லைன் பிரசாரத்தை தொடங்கிய சகோதரி
சுஷாந்த் சிங்கின் சகோதரி சுவேதா சிங் கீர்த்தி, தனது சகோதரரின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆன்லைன் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.;
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020-ம் ஆண்டில் மும்பையில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்து கிடந்தார். இவரது மரணம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலை என்று சொன்னாலும், மரணம் குறித்தான மர்மம் தற்போதுவரை விலகவில்லை.
இதற்கிடையில் சுஷாந்த் சிங்கின் சகோதரி சுவேதா சிங் கீர்த்தி, தனது சகோதரரின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆன்லைன் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து சுவேதா சிங் கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளார். அதில், 'ரசிகர்கள் தங்களது மணிக்கட்டில் அல்லது நெற்றியில் சிவப்பு நிற துணியைக் கட்டி, அந்த தருணத்தைப் படம்பிடித்து இந்த ஹேஷ்டேக்கில் பதிவிட்டு சுஷாந்த் சிங் மரணத்துக்கு நீதி கேளுங்கள்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்னும் 45 நாட்களில் சுஷாந்த் மறைந்து 4 ஆண்டுகள் நிறைவடைகிறது. எனவே இந்த மரணம் குறித்த விசாரணையை சி.பி.ஐ. துரிதப்படுத்தி விரைவில் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஹேஷ்டேக்கில் சுஷாந்தின் ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதத்திலும், சுவேதா இதுபோல் ஒரு வீடியோவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.