பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்- கூப்பர் மருத்துவமனை ஊழியர்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டு இறந்திருக்கலாம் என கூப்பர் மருத்துவமனையின் மருத்துவப் பணியாளர் கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது!;

Update: 2022-12-26 11:20 GMT

மும்பை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டு இறந்திருக்கலாம் என உடல் பிரேதபரிசோதனை குழுவில் இருந்த கூப்பர் மருத்துவமனையின் ஊழியர் ரூப்குமார் ஷா கூறி உள்ளார்.

அவர் கூறியதாவது :-

சுஷாந்த் சிங்கின் கழுத்திலும் உடலின் பிற பாகங்களிலும் காயங்கள் இருந்தன.இது தற்கொலை இல்லை. கொலை என என்னால் உடலை பார்த்தவுடனேயே ஊகிக்க முடிந்தது.

விதிகளின் படி உடல் பிரேதபரிசோதனையை வீடியோ எடுத்திருக்க வேண்டும்.ஆனால் எங்கள் மேலதிகாரி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு உடலை போலிசிசிடம் ஒப்படைக்க சொல்லிவிட்டார் என கூறி உள்ளார்.

இந்திப்பட உலகில் வளர்ந்து வந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்( வயது34) கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார்.

அவர் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனையிலும் அவர் கொலை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. ஆனாலும் சுஷாந்த் சிங் மரணத்தில் சர்ச்சை எழுந்தது.

இதற்கிடையே மும்பை போலீசார் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தி வந்தனர். இது குறித்து போலீசார் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரவர்த்தி மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் இந்தி திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் விசாரித்தனர்.

குறிப்பாக அவர் வாரிசு நடிகர்கள், பெரிய நடிகர்களின் தலையீட்டால் படவாய்ப்புகளை இழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக மும்பை போலீசார் பிரபல இயக்குனர்கள், தயாரிப்பு நிறுவனங்களிடம் கூட விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் சுஷாந்த் சிங் வழக்கை மத்திய அரசு அதிரடியாக சி.பி.ஐ.க்கு மாறியது. அவர்கள் சுஷாந்த் சிங் வழக்கை மர்ம மரண வழக்காக விசாரித்தனர். அவர்கள் முழுக்க, முழுக்க சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரவர்த்தி, வீட்டில் தங்கியிருந்த நண்பர் சித்தார்த் பிதானி, வீட்டு வேலைக்காரர்கள் ஆகியோரிடம் மட்டுமே விசாரணை நடத்தினர்.

ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.இந்தநிலையில் ரியா சக்கரவர்த்தி, சித்தார்த் பிதானி மற்றும் வீட்டு வேலைக்காரர்கள் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வாங்கி கொடுத்ததாகவும், பயன்படுத்தியதாகவும் கூறி போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவர்களை கைது செய்தது.

அந்த வழக்கின் விசாரணையும் தற்போது நடந்து வருகிறது.இந்தநிலையில் சுஷாந்த் சிங் மரணம் அடைந்து நேற்று ஓராண்டு நிறைவடைந்தது. ஆனால் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற மர்மம் விலக வில்லை.


Tags:    

மேலும் செய்திகள்