தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் காஜல் அகர்வால். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். வெப் தொடர்களிலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், "தென்னிந்திய சினிமாவில் நல்ல நெறிமுறைகள், ஒழுக்கம் போன்றவைகள் உள்ளன. பணியாற்றுவதற்கான நல்ல சூழலும் இருக்கிறது. ஆனால் இந்தி திரையுலகில் அது இல்லை. திறமை இருந்தால் தென்னிந்திய ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். நான் பிறந்தது மும்பையில் என்றாலும் தென்னிந்திய திரையுலகில்தான் எனது சினிமா வாழ்க்கை ஆரம்பம் ஆனது. தென்னிந்திய சினிமா துறையில் நட்புறவுடன் கூடிய நல்ல சூழ்நிலை உள்ளது. அங்கு திறமையான இயக்குனர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் இருக்கிறார்கள்.
தென்னிந்திய படங்களில் நல்ல கதையம்சம் உள்ளது. இதுபோன்ற நல்ல விஷயங்கள் இந்தியில் இல்லை'' என்றார். காஜல் அகர்வால் கருத்துக்கு தென்னிந்திய ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். இந்தி ரசிகர்கள் அவரை கண்டித்து வருகிறார்கள்.