தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தொடங்கியது
முக்கிய நடிகர்களின் திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடுகள் விதித்துள்ள சூழலில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் தற்போது சென்னையில் தொடங்கியது.;
சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத்திற்கு இடையே பல்வேறு கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இது குறித்து விவாதிப்பதற்காக தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இன்று தற்போது கூட்டம் தொடங்கியது.
சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் நாசர் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஸ்ரீமன், சரவணன் உள்ளிட்ட பலரும் செயற்குழு கூட்டத்திற்கு வந்துள்ளனர்.
அண்மையில் தயாரிப்பாளர் சங்கம் நடிகர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆகஸ்ட் 16ம் தேதி முதல் புதிதாக தொடங்கக் கூடிய திரைப்படங்களுக்கு பூஜைகள் போடக்கூடாது. நவம்பர் 1ம் தேதி முதல் புதிய படப்பிடிப்புகள் எதையும் தொடங்கக்கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. நடிகர் விஷால், தனுஷ் ஆகியோர் மீதும் சில கட்டுப்பாடுகளை விதித்து அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. நடிகர் சங்கமும் இதற்கு எதிர்வினையாக அறிக்கைகளை வெளியிட்ட நிலையில் தயாரிப்பாளர் சங்கம் தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதுகுறித்து விவாதிக்க நடிகர் சங்க செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் விஷால், துணைத் தலைவர் கருணாஸ் ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இன்று கூடியுள்ள தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்க கட்டுப்பாடு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.