மறைமுகமாக ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆதரவாக பேசிய நடிகர் சோனுசூட்
மறைமுகமாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆதரவாக சோனுசூட் பேசியுள்ளார்.;
மும்பை,
இந்தி, தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்தவர் சோனு சூட். தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவ தனியாக அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். திரைப்பட ஆசையில் மும்பைக்கு வருபவர்களுக்கு உதவ தனி மையம் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் முன்னதாக மும்பை-ஐதராபாத் அணிகள் மோதின. இதில், ஐதராபாத் அணி 277 ரன்கள் அடித்தது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை ஐதராபாத் அணி படைத்தது. அந்த போட்டியில் மும்பை அணி போராடி தோல்வி அடைந்தது.
இதனால், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை பலரும் விமர்சித்தனர். இந்நிலையில் சோனு சூட் மறைமுகமாக ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து சோனு சூட் தனது எக்ஸ் தளப்பதிவில்,
நமது வீரர்களை நாம் மதிக்க வேண்டும். நம்மை பெருமைப்படுத்திய வீரர்கள், நம் நாட்டை பெருமைப்படுத்திய வீரர்கள். ஒரு நாள் நீங்கள் அவர்களை உற்சாகப்படுத்துகிறீர்கள், அடுத்த நாள் அவர்களைக் இழிவுப்படுத்துகிறீர்கள். தோல்வி அடைவது அவர்கள் அல்ல, நாம்தான். எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரையும் நான் விரும்புகிறேன். அவர் எந்த அணிக்காக விளையாடுகிறார் என்பது முக்கியமில்லை. அவர் கேப்டனாக விளையாடுகிறாரா அல்லது அணியில் 15வது வீரராக விளையாடுகிறாரா என்பது விசயமில்லை. அவர்கள் அனைவரும் ஹீரோக்கள்தான். இவ்வாறு தெரிவித்துள்ளார்.