ஆஸ்பத்திரிக்கு செல்லக்கூடாது என்று முடிவு செய்த நடிகை - காரணம் தெரியுமா?
இனி ஆஸ்பத்திரிக்கு செல்லக்கூடாது என்று முடிவெடுத்திருப்பதாக நடிகை சோனாக்சி சின்ஹா கூறினார்.;
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான தபாங் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 14 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். இவர் பல வருடங்களாக நடிகர் சாஹீர் இக்பால் என்பவரை காதலித்து வந்தார். சமீபத்தில், இருவருக்கும் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், சோனாக்சி இனி ஆஸ்பத்திரிக்கு செல்லக்கூடாது என்று முடிவு செய்து இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'இனி ஆஸ்பத்திரிக்கு செல்லக்கூடாது என்று முடிவு செய்து இருக்கிறேன். காரணம் என்னை அங்கு பார்த்தால் கர்ப்பம் என்று நினைக்கிறார்கள். எனது தந்தை சத்ருகன் சின்ஹா காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பார்க்கத்தான் ஆஸ்பத்திரிக்கு சென்றேன். உடனே நான் கர்ப்பம் என்று வதந்திகளை பரப்ப ஆரம்பித்து விட்டார்கள்.
திருமணத்துக்கு பிறகு எனக்கு எந்த மாற்றமும் வரவில்லை. திருமணத்துக்கு முன்னால் எப்படி மகிழ்ச்சியாக இருந்தேனோ அப்படியே இப்போதும் சந்தோஷமாக இருக்கிறேன். ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்கிறேன். மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறேன்' என்றார்.