'தவறான தகவல்கள்...'- போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து நடிகை விளக்கம்

பணியாளரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2024-09-25 16:03 GMT

சென்னை,

தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மாளவிகா நாயர், சமீபத்தில் வெளியான விஜய்யின் 'தி கோட்' படத்திலும் நடித்திருந்தார்.

இவ்வாறு முன்னணி நடிகையாக இருக்கும் இவர் கடந்த 2022-ம் ஆண்டு தனது வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போனதாகவும் அதில் வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து தன்னை, பார்வதி நாயர் உள்பட 7 பேர் தாக்கியதாக சுபாஷும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சுபாஷ் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கடந்த மாதம் 29-ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில், பார்வதி நாயர் உள்பட 7 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், நடிகை பார்வதி நாயர் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

'சில தவறான தகவல்களும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் பரப்பப்படுகின்றன. நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக எனது சட்டக்குழு நடவடிக்கை எடுக்கும். விரைவில் உண்மை வெளிவரும், ' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்