பிரபல தெலுங்கு நடிகர் விஜய்தேவர கொண்டாவுடன் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன்
பிரபல தெலுங்கு நடிகர் விஜய்தேவர கொண்டாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.;
தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து இந்தியா முழுவதும் கவனம் பெற்ற விஜய்தேவரகொண்டா முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். அனைத்து மொழி படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வருகின்றன.
தமிழில் நோட்டா படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் தெலுங்கு, இந்தியில் வெளியான லைகர் தோல்வி அடைந்ததால் அதிர்ச்சியானார். தற்போது குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தனது 'பிரின்ஸ்' படம் தெலுங்கிலும் வெளியாவதை தொடர்ந்து ஐதராபாத் சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் திடீரென்று விஜய்தேவரகொண்டாவை சந்தித்து பேசினார். இருவரும் பிரின்ஸ் பட விழாவிலும் ஒன்றாக கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசும்போது, ''விஜய்தேவரகொண்டா பிரின்ஸ் போல இருக்கிறார். மிகவும் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பிரபல நடிகராக உயர்ந்துள்ளார். இந்தியா முழுவதும் அனைவரும் அறியும் வகையில் பான் இந்தியா நடிகராகிவிட்டார். அவரது வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் செல்கிறது. விஜய்தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது" என்றார். இதன் மூலம் இருவரும் புதிய படத்தில் சேர்ந்து நடிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.