சிகிச்சைக்கு பிறகு நலமுடன் வீடு திரும்பினார் பாடகி பி.சுசீலா
பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா சிகிச்சைக்கு பிறகு நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.
சென்னை,
இனிய குரலால் பெரும் புகழ்பெற்ற பி.சுசீலா தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். 1953-ல் 'பெற்றதாய்' படத்தில் பாடகியாக அறிமுகமாகி, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, தமிழுக்கு அமுதென்று பேர், சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல, அமுதே பொழியும் நிலவே, உன்னை நான் சந்தித்தேன், ஆயிரம் நிலவே வா, பார்த்த ஞாபகம் இல்லையோ, நான் பேச நினைப்பதெல்லாம் உள்பட ஆயிரக்கணக்கான காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
மத்திய அரசு அவருக்கு பத்மபூஷண் விருதை வழங்கியது. 5 முறை தேசிய விருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். தென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
பின்னணி பாடகி பி.சுசீலா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பி.சுசிலா சிகிச்சைக்கு பிறகு நலமுடன் வீடு திரும்பியுள்ளார். இதுதொடர்பாக, பி.சுசீலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:-'தற்போதுதான் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளேன். நலமுடனும், மகிழ்ச்சியுடனும் உள்ளேன். நான் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி. கடவுளை நம்பியவர்கள் கைவிடப்பட மாட்டார்கள்.'
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.