'அடுத்த ஜென்மத்தில் அவர்தான் எனது அம்மா' - பூர்ணாவை பாராட்டி பேசிய மிஷ்கின்
சமீபத்தில் 'டெவில்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
சென்னை,
'சவரக்கத்தி' இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "டெவில்". இப்படத்தில் விதார்த், பூர்ணா, சுபஸ்ரீ ராயகுரு மற்றும் ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார்.
மாருதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் மூலம் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் அடுத்த மாதம் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குனர் மிஷ்கின் நடிகை பூர்ணாவை பாராட்டி பேசியுள்ளார். அவர் பேசுகையில், 'சவரக்கத்தி படத்தில் என் அம்மாவின் கதாபாத்திரத்தை தான் எழுதியிருந்தேன்… அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது பூர்ணா. என் வாழ்க்கையில் பூர்ணா மிக முக்கியமான பெண். அடுத்த ஜென்மத்தில் அவர்தான் என்னுடைய அம்மாவாக இருக்க வேண்டும் என நினைத்தது உண்டு.
அவர் வயிற்றில் நான் குழந்தையாகப் பிறக்க விரும்புகிறேன். என்னையும் அவரையும் குறித்து சிலர் தவறாக பேசுவார்கள். அவர் எனக்கு தாய் போன்றவர். என் குழந்தையை விட அவர் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். அவர் ஒரு நல்ல நடிகை, சாகும்வரை அவர் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
மற்ற படங்களில் அவர் நடிப்பாரா என்று எனக்கு தெரியாது. என் படங்களில் எப்போதும் பூர்ணா நடிப்பார். யார் ஒருவரால் கற்பனையான உலகத்தில் நிஜமாகவே வாழ முடிகிறதோ அதுதான் உண்மையான நடிப்பு. அவர்கள்தான் சிறந்த நடிகர்கள். சிலர் அப்படி நடிக்க முயற்சி செய்கிறார்கள் ஆனால் அவர்களால் முடியவில்லை. நடிக்கும்போது தன்னுடைய சுயத்தை மறந்து நடிப்பவர்களில் ஒருவர்தான் பூர்ணா' என்றார்.