'பதான்' படத்தை தடை செய்யக்கோரி ஷாருக்கானின் கொடும்பாவி எரித்து போராட்டம்

வீர சிவாஜி அமைப்பை சேர்ந்தவர்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பதான் படத்தை தடை செய்யும்படி கோஷமிட்டு தீபிகா படுகோனே, ஷாருக்கான் ஆகியோரின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-16 01:49 GMT

சித்தார்த் ஆனந்த் இயக்கிய 'பதான்' இந்தி படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ரூ.15 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்.

இந்த நிலையில் பதான் படத்தில் இடம்பெற்றுள்ள தீபிகா படுகோனேவின் கவர்ச்சி குத்தாட்ட பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி உடையில் கவர்ச்சி நடனம் ஆடி இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

வீர சிவாஜி அமைப்பை சேர்ந்தவர்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பதான் படத்தை தடை செய்யும்படி கோஷமிட்டு தீபிகா படுகோனே, ஷாருக்கான் ஆகியோரின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடும்பாவியை செருப்பால் அடிப்பது போன்ற வீடியோவையும் வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா கூறும்போது, ''தீபிகா படுகோனே காவி உடை அணிந்துள்ளார். அசுத்தமான மனநிலையில் படமாக்கி உள்ளனர். பாடல் காட்சியில் இடம்பெற்றுள்ள உடை மற்றும் பாடல் வரிகளையும் நீக்க வேண்டும். இல்லையேல் படத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து யோசிக்க வேண்டிவரும்" என்றார்.

இதனால் படத்துக்கு தடைவிதிக்கப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பதான் படத்தை புறக்கணிக்கும்படி ஹேஷ்டேக்கும் டிரெண்டாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்