நடிகர் சதீஷ் நடித்த 'சட்டம் என் கையில்' படத்தின் டீசர் வெளியீடு

இயக்குனர் சாச்சி 'சட்டம் என் கையில்' படத்தினை இயக்கி உள்ளார்.

Update: 2024-09-13 14:56 GMT

சென்னை,

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ். இவர் 'மெரினா, தமிழ் படம், மதராச பட்டணம், வாகை சூடவா, தாண்டவம், எதிர்நீச்சல், கத்தி, மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், கலகலப்பு-2, சிக்ஸர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் சதீஷ் 'நாய் சேகர்' என்ற திரைப்படம் மூலம் கதையின் நாயகனாக களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்ததாக 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தநிலையில் தற்போது, 'சட்டம் என் கையில்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை சம்பதா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'சிக்ஸர்' திரைப்படத்தை இயக்கிய சாச்சி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்தநிலையில் தற்போது, 'சட்டம் என் கையில்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஒருவித மர்மத்துடன் தொடங்குகிறது டீசர். கொலைகள் நடக்க அதற்கு யார் காரணம் என தெரியாமல் காவல் துறை அல்லல்படுகிறது. விசாரணை நடக்க, காவல்துறை வாகனத்தில் இருந்து வெளியே வருகிறார் சதீஷ். முகத்தில் ஒருவித பயத்தையும், வில்லத்தனத்தையும் கொண்டிருக்கும் அவர், காவல் நிலையத்தில் அமர வைக்கப்பட்டிருக்கிறார். அடுத்தடுத்து சஸ்பென்ஸுடன் காட்சிகள் நகர்கின்றன. டீசரில் பின்னணி இசை கவனம் பெறுகிறது. காமெடியனாக தொடங்கிய சதீஷ், க்ரைம் த்ரில்லர் படத்தை தேர்வு செய்து நடித்திருப்பதை டீசர் உணர்த்துகிறது. விறுவிறுப்பாக நகரும் டீசர் படம் கொலையையும், அதன் காரணங்களையும் மையமாக வைத்து உருவாகியிருப்பதை உணர்த்துகிறது.

இப்படம் வருகிற 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்