நடிகர் ரன்வீர்சிங் ஜோடியாகிறார் சமந்தா?
பிரபல பாலிவுட் ஹீரோ ரன்வீர்சிங் ஜோடியாக, சமந்தா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.;
சமந்தா விவாகரத்துக்கு பிறகு படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். கவர்ச்சியிலும் துணிச்சலாக நடிக்கிறார். சமீபத்தில் பல மொழிகளில் திரைக்கு வந்த புஷ்பா படத்தில் சமந்தா ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஆடிய குத்தாட்டம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
விஜய்சேதுபதி ஜோடியாக நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் வெளியாகி இருக்கிறது. தற்போது சாகுந்தலம் புராண படத்தில் சகுந்தலை வேடத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.
குஷி தெலுங்கு படத்தில் விஜய்தேவரகொண்டா ஜோடியாக நடித்து வருகிறார். இந்தியில் பேமிலிமேன்-2 வெப் தொடரில் நடித்த பிறகு இந்தி பட வாய்ப்புகளும் வந்துள்ளன. இந்தி இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார்.
இந்த நிலையில் புதிய படத்தில் ரன்வீர்சிங் ஜோடியாக சமந்தா நடித்து இந்தியில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரன்வீர் சிங்குடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமந்தா வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் புதிய இந்தி படத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக இந்தி பட உலகில் பேசி வருகிறார்கள்.