ரூபா ஐபிஎஸ் - ரோகிணி ஐஏஎஸ்: பெண் உயரதிகாரிகள் மோதலால் பதட்டத்தில் அரசியல்வாதிகள்...!

சில தருணங்களில் ரூபாவின் குற்றச்சாட்டுகள் ஏடாகூடமாவதும் உண்டு. ரோகிணி ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிரான ரூபாவின் குற்றச்சாட்டும் அப்படி ஆகியிருக்கிறது.

Update: 2023-02-20 11:29 GMT

பெங்களூரு

கர்நாடக மாநிலத்தின் ஐபிஎஸ் - ஐஏஎஸ் என இரு பெண் உயரதிகாரிகள் இடையிலான வரம்பு மீறிய மோதலால், தங்கள் வண்டவாளம் வெளிப்படுமோ என்ற அச்சத்தில் அரசியல்வாதிகள் நடுங்கிப்போய் உள்ளனர். இந்த இருவரில், ரூபா ஐபிஎஸ் தற்போது கைவினைப் பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக உள்ளார். ரோகிணி ஐஏஎஸ் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக உள்ளார்.

ரூபா ஐபிஎஸ் அதிகாரி தமிழக மக்கள் வரை நன்கு பரிச்சயமானவர். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வி.கே.சசிகலா அடைக்கப்பட்டிருந்தபோது, அவர் சிறை விதிகளை மீறி பல்வேறு சலுகைகளை அனுபவிப்பதாகவும், அதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு கோடிகளில் தொகை பரிமாறியதாகவும் குற்றம்சாட்டியவர்.

இது உட்பட ரூபா தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் பல்வேறு அதிரடிகளை அமபலப்படுத்தியதில் மக்கள் மத்தியில் வெகுவாய் பிரபலமானவர். இதற்கு பரிசாக 20 ஆண்டுகளில் 40க்கும் மேலான எண்ணிக்கையில் பணியிடங்களுக்கு மாற்றப்பட்டவர். இருந்தாலும் தனது அதிரடி போக்கினை தொடர்ந்து வருகிறார். சில தருணங்களில் ரூபாவின் குற்றச்சாட்டுகள் ஏடாகூடமாவதும் உண்டு. ரோகிணி ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிரான ரூபாவின் குற்றச்சாட்டும் அப்படி ஆகியிருக்கிறது.

மைசூரு மாவட்ட கலெக்டராக ரோகிணி இருந்தப்போது அப்போதைய மந்திரியும் இப்போதைய எம் எல் ஏவுமான சா.ரா.மகேஷ் உடன் மோதல் போக்கினை கொண்டிருந்தார். அது பழைய கதை. மதசார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த இந்த மகேஷ் உடன், சில தினங்களுக்கு முன்னர் உணவகம் ஒன்றில் உடனிருந்தது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிரடியாக வெளியிட்டார் ரூபா. ரோகிணி - மகேஷ் என முரண்பட்டிருந்த இருவரிடையே திடீர் சமசரம் ஏற்பட்டிருப்பதன் பின்னணி குறித்தான கேள்வியையும் எழுப்பியிருந்தார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி தற்கொலை வழக்கில், சி.பி.ஐ. அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையில் அவருடன் பணியாற்றியவர்கள் பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது. டி.கே.ரவி எல்லை தாண்டி இருந்தால், அதனை உடனடியாக தடுத்து இருக்க வேண்டும். அவரது செல்போன் எண் மற்றும் வாட்ஸ்-அப்பை அப்போதே 'பிளாக்' செய்திருக்க வேண்டும். ஆனால் அப்போது 'பிளாக்' செய்யாமல், தற்போது 'பிளாக்' செய்திருப்பதன் காரணம் என்ன?.

மண்டியா மாவட்ட கிராம பஞ்சாயத்து செயல்அதிகாரியாக இருந்த போது கூடுதலாக கழிவறை கட்டியதாக கூறி மத்திய அரசிடம் இருந்து விருது பெற்றிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக எந்த விசாரணையும் நடைபெறவில்லை. சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஆக்சிஜன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் 24 பேர் உயிரிழந்த விவகாரத்தில், அவர் மீது நேரடியாக குற்றச்சாட்டு வந்தாலும், தப்பித்து விட்டார்.

கொரோனா காலத்தின் மத்தியில் மாநில மக்கள் கொத்துக்கொத்தாக செத்துக்கொண்டிருந்தபோது, ரோகிணி ஐஏஎஸ் தனது ஆடம்பர மாளிகையில் நீச்சல் குளம் கட்டி உள்ளார். மேலும் சில குற்றச்சாட்டுகள் முன்னாள் இந்நாள் அரசியல்வாதிகளின் ஊழல்களையும் சுட்டிக்காட்டின.

கன்னட பெண்ணும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஷில்பா நாக்குடன் சண்டை நடந்தது ஏன்?. அதற்கு காரணம் என்ன?, நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஷா குப்தாவுடன் சண்டை போட்டது ஏன்?, இதுபற்றி மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு நன்கு தெரியும்.

மற்றொரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவண்ணனுடன் அவர் (ரோகிணி சிந்தூரி) சண்டை போட்டு இருந்தார். இந்த விவகாரங்களில் விசாரணை நடைபெறவில்லை. டி.கே.ரவி தற்கொலைக்கான காரணம் பற்றி அப்போது சிலர் கூறி நான் நம்பவில்லை.

தற்போது அந்த காரணத்தை நம்புகிறேன். மைசூரு மாவட்ட பா.ஜனதா எம்.பி.யான பிரதாப் சிம்ஹா மீது கூறிய குற்றச்சாட்டையும் நிரூபிக்கவில்லை. இதுபோல், சா.ரா.மகேஷ் எம்.எல்.ஏ. மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். அதில், ஒரு குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்காதது ஏன்?.

பள்ளி பைகளை அதிக விலைக்கு விற்றதாக லோக் அயுக்தா போலீசில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர் மீது விசாரணை கோரி லோக் அயுக்தா, அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. ஆனால் அவர் மீது விசாரணை நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை.

சாதாரண அதிகாரிக்கு, இதுபோன்று அரசின் ஆதரவு இருக்குமா?. இவரது கணவர் மற்றும் மாமா ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்கள். பல முறை அவர்கள் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள். இதற்கு தேவையான உதவிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து செய்து கொடுத்து வருகிறார். அவர்கள் நில முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் என்னிடம் இருக்கிறது. அதன்மீது விசாரணை நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்து தான்பார்க்க வேண்டும்.

நான் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருப்பதால் பெங்களூருவில் இருந்து தூரமான யாதகிரியில் 3 ஆண்டுகள் பணியாற்றினேன். பின்னர் பணி இடமாற்றம் பெற்று பெங்களூருவுக்கு வந்தேன். இதனை எதிர்த்து என்னுடன் பணியாற்றிய அதிகாரி கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதுபோல், ரோகிணி சிந்தூரி தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி வாதாடி இருந்தார். ரோகிணி சிந்தூரிக்கு கிடைத்த பணி இடமாற்றம், எனக்கு கிடைக்கவில்லை என கூறி உள்ளார்.

இந்த நிலையில் தனிப்பட்ட புகைப்படங்கள் தொடர்பாக விளக்கமளித்த ரோகிணி, அவை அனைத்தும் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மற்றும் சமூக ஊடகங்களில் பகிர்ந்த படங்களே என சாதித்தார். ஆனால், அந்த படங்களில் சில பொதுவெளியில் பகிர வாய்ப்பில்லாத வகையிலும் அமைந்திருந்தன.

இதுகுறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'மனநிலை பாதிப்பு என்பது ஒரு பெரிய பிரச்சினை. இதற்கு மருந்து-மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். இது பொறுப்பான பதவியில் இருப்பவர்களை பாதிக்கும்போது, அது பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தும். எனக்கு எதிராக ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

இது அவரது தரத்தை வெளிப்படுத்துகிறது. அவர் இதுவரை பணியாற்றிய ஒவ்வொரு இடத்திலும் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார். தற்போது பணியாற்றும் இடத்திலும் அவ்வாறு செய்துள்ளார். அவர் எப்போதும் ஊடக வெளிச்சத்தை பெற ஆசைப்படுகிறார்.

இதற்கு அவரது சமூக வலைத்தள கணக்கு ஆதாரமாக உள்ளது. தனது பணியில் கவனம் செலுத்துவதைவிட யாராவது ஒருவரை இலக்காக கொண்டு தவறான செய்திகளை பரப்புவதை தனது பொழுது போக்காக கொண்டுள்ளார். இந்திய தண்டனை சட்டத்தின்படி எனக்கு எதிராக அவர் கூறிய தகவல்கள் சட்டத்திற்கு எதிரானது, கிரிமினல் குற்றம் ஆகும்.

அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன். எனது புகைப்படங்களை எனது சமூக வலைத்தளத்தில் இருந்து 'ஸ்கிரீன் ஷாட்' மூலம் எடுத்துள்ளார். அதை எனக்கு எதிராக தவறான முறையில் வெளியிட்டுள்ளார். நான் புகைப்படங்களை அனுப்பியதாக கூறும் அதிகாரிகளின் பெயரை அவர் கூற வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

இரு பெண் உயரதிகளின் மோதல் விஷயத்தில் மாநில முதல் மந்திரி பசவராஜ் பொம்மை உட்பட அரசியல் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒதுங்கியே உள்ளனர். 'இரு பெண்களின் தனிப்பட்ட விவகாரம் இது' என்று பொம்மை எச்சரிக்கையுடன் நழுவினார். சட்டப்பேரவை தேர்தல் நெருக்கத்தில், எந்த சிக்கலிலும் மாட்டிக்கொள்ள அவர் உட்பட எந்த அரசியல்வாதியும் விரும்பவில்லை.

ஆனால், ரோகிணி ஐஏஎஸ் மீதான குற்றச்சாட்டுகளின் போக்கில், அரசியல் புள்ளிகளின் ஊழல் விவகாரங்களும் வெளிப்பட்டு வந்ததில், அதிகார - அரசியல் மட்டத்தில் உள்ளோர் அலற ஆரம்பித்தனர். உடனடியாக இருதரப்பிலும் சுமூகம் எட்டுவதற்கான சமரச வேலைகளையும் முடுக்கி விட்டனர்.

இதன் விளைவாக ரோகிணிக்கு எதிரான பதிவுகளை ரூபா தனது சமூகவலைதள பக்கங்களில் இருந்து நீக்கியுள்ளார். இருந்த போதும் அவற்றின் ஸ்கிரீன்ஷாட் பதிவுகள் தீயாய் பரவி வருகின்றன. இப்போதைக்கு 2 பெண் அதிகாரிகளும் அமைதி காத்தாலும், உள்ளுக்குள் கனன்று வரும் பிரச்சினை எப்போது வேண்டுமானாலும் வெடிக்க வாய்ப்பிருக்கிறது.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாது, பல்வேறு அரசியல் புள்ளிகளின் ஊழல் விவகாரங்களும் இந்த சண்டையில் வெளிப்பட வாய்ப்புள்ளதால், தேர்தல் முடியும் வரையில் ரூபா ஐபிஎஸ் வாயை அடைப்பதற்கான வழிகளை சத்தமின்றி ஆராய்ந்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்