ஆர்.ஆர்.ஆர். படம் வெளியாகி ஓராண்டு நிறைவு; இன்னும் ஹவுஸ்புல் ஆக ஓடுவது மகிழ்ச்சி என இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு

ஆர்.ஆர்.ஆர். படம் வெளியாகி ஓராண்டு நிறைவு செய்த நிலையில், இன்னும் ஹவுஸ்புல் ஆக ஓடுவது மகிழ்ச்சி தருகிறது என இன்ஸ்டாகிராமில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-03-25 10:51 GMT

புனே,

நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்.ஆர்.ஆர்.' தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகியோரை மையப்படுத்தி படம் உருவாகி இருந்தது.

இதில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடித்து இருந்தனர். நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட் உள்ளிட்டோரும் முக்கிய வேடமேற்று இருந்தனர். உலகம் முழுவதும் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி இப்படம் வெளியானது.

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது. உலக அளவில் ரூ.1,200 கோடி ஈட்டி வசூல் சாதனையும் படைத்தது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் கடந்த ஜனவரியில், சிறந்த அசல் பாடலுக்கான பிரிவில் கோல்டன் குளோப் விருது பெற்றது. 5 நாட்களுக்கு பின்னர், 2 கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகளையும் வென்றது. தொடர்ந்து சிறந்த அசல் பாடலுக்காக ஆஸ்கார் விருதும் வென்று படக்குழுவினரை பெருமையடைய செய்தது.

இந்த நிலையில், ஆர்.ஆர்.ஆர். படத்திற்கான இன்ஸ்டாகிராம் பதிவில் இன்று வெளியிடப்பட்ட செய்தியில், ஆர்.ஆர்.ஆர். படம் வெளிவந்து ஓராண்டு நிறைவு செய்து உள்ளது. உலகின் எங்கோ சில மூலைகளில், திரையரங்கங்களில் இன்னும் ஹவுஸ்புல் ஆகவும் படம் ஓடி கொண்டிருக்கிறது.

இந்த உணர்வானது வேறு எந்த விருதும் பெறுவதனை காட்டிலும் பெரியது. இதன் வழியே எங்கள் மீது நீங்கள் பொழிந்து வரும் அன்புக்கு, நாங்கள் தெரிவிக்கும் நன்றி எந்த வகையிலும் ஈடாகாது என தெரிவித்து அதன் அருகே கருப்பு நிறத்தில் இதயம் எமோஜி ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்