'மஞ்சள் வீரன்' படத்திலிருந்து நீக்கம்...டிடிஎப் வாசன் வேதனை

'மஞ்சள் வீரன்' படத்திலிருந்து டிடிஎப் வாசனை நீக்குவதாக இயக்குனர் செல்அம் அறிவித்துள்ளார்.

Update: 2024-10-07 13:13 GMT

சென்னை,

பைக்கில் பயணம் செய்து அதனை யூடியூபில் வீடியோவாக போட்டு பிரபலமானவர் டிடிஎப் வாசன். இவர் பிரபலமானதை தொடர்ந்து இயக்குனர் செல்அம் இயக்கத்தில் 'மஞ்சள் வீரன்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார்.  இவர் ஏற்கனவே திருவிக பூங்கா என்கிற படத்தை இயக்கி இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்றமும் வெளியாகி வைரலானது.

இந்தநிலையில், 'மஞ்சள் வீரன்' படத்தில் இருந்து படத்தின் கதாநாயகனும் , பிரபல யூடியூபருமான டிடிஎப் வாசன் நீக்கப்பட்டுள்ளார். மஞ்சள் வீரன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், மஞ்சள் வீரன் படத்திலிருந்து டிடிஎப் வாசனை நீக்குவதாக அப்படத்தின் இயக்குனர் செல்அம் அறிவித்துள்ளார். மேலும், படத்திற்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து டிடிஎப் வாசன் தனது யூடியூப் சேனலில் இயக்குனர் செல்அம், என்னை படத்தில் இருந்து நீக்கியதே எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். மேலும், இதுபற்றி அவர் ஒரு முறைக்கூட என்னிடம் பேசியது இல்லை. அதுமட்டுமில்லாமல், அவர் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்லி இருந்தார். ஆனால், மஞ்சள் வீரன் படத்தின் போட்டோஷூட் மட்டுமே நடந்தது.

படத்தின் போட்டோஷூட் மற்றும் படபூஜைக்கு கூட நான் பணம் செலவு செய்தேன். அந்த பணத்தைக்கூட நான் கேட்க மாட்டேன். ஆனால் என்னை நீக்குவது பற்றி என்னிடத்தில் சொல்லி இருக்கலாம். என்னிடம் எதையும் சொல்லாமல் நேரடியாக மீடியாவில் என்னை நீக்குவதாக சொல்லி இருக்கிறார். அது வருத்தம் அளிக்கிறது. நான் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன், ஆனால் அவர் என் அழைப்பை எடுக்கவில்லை. எதற்காக என்னை படத்தில் இருந்து நீக்கினார் என்ற காரணத்தை மட்டும் சொன்னால் போதும் என்று யூடியூப் சேனலில் டிடிஎப் வாசன் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்