இஸ்ரேலுக்கு ஆதரவாக போரிட தயார்: பிரபல நடிகை பேட்டி
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக போரிட தயார் என்று பிரபல நடிகை பேட்டியில் கூறியுள்ளார்.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து பலரை பணய கைதிகளாக பிடித்து சென்றது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன. ஆயுத உதவியும் செய்யப்பட்டு வருகின்றன.
ஹமாஸ் அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது என கூறப்படுகிறது. இந்த சண்டையில், பெண்கள், குழந்தைகள் உள்பட இருதரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர்.
இந்த நிலையில், பாடா என்ற பிரபல வலை தொடரில் நடித்து வந்த இஸ்ரேல் நாட்டு நடிகை ரோனா-லீ ஷிமோன் என்பவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, உண்மையாக. இந்தியா போன்ற ஓர் அழகான கூட்டணி நாடு இருப்பதற்காக நான் பெருமையாக உணர்கிறேன். பூமியில் எனக்கு பிடித்த இடங்களில் இந்தியாவும் ஒன்று. அந்நாட்டு மக்களை நேசிக்கிறேன்.
இஸ்ரேலில் கடந்த 7-ந்தேதி நடந்த இந்த பயங்கர செயலுக்கு முதலில் நீங்கள் கண்டனம் தெரிவிப்பது ஏன் என்பது உண்மையில் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதனை விட வேறெதுவும் நான் எதிர்பார்க்கவில்லை.
என் மனதில் இருந்து இதற்காக நான் நன்றியுணர்வை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். எங்களுக்காக நீங்கள் கண்டனம் தெரிவிப்பது சிறந்த விசயம் என நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், நாங்கள் போரின் நடுவே இருக்கிறோம். இதனால் பலரின் வாழ்வு பாதிக்கப்பட போகிறது. ஆனால், நாங்கள் வெற்றி பெறுவோம். நாங்கள் அதற்காக தயாராகி வருகிறோம். பணய கைதிகளை மீட்டு திருப்பி கொண்டு வருவதே எங்களுடைய முதல் முன்னுரிமையான விசயம் என்று கூறியுள்ளார்.
36 நாடுகளை சேர்ந்த பணய கைதிகள் பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்க சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பேட்டியின்போது, உணர்ச்சிவசப்பட்டு அவர் கண்கலங்கினார். ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரில் ஈடுபடுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இஸ்ரேல் வெற்றி பெற என்னுடைய சக்திக்கு உட்பட்டு எல்லா விசயங்களையும் நான் செய்வேன். ஹமாஸ் அமைப்பை எதிர்த்து போராட உறுதியெடுத்து உள்ளேன் என கூறியுள்ளார்.
பாடா தொடரில் நடித்து வரும் மற்றொரு நடிகரான லையர் ராஸ் என்பவர் ஹமாஸ் அமைப்பை எதிர்க்கும், பிரதர் ஆப் ஆம்ஸ் என்ற ஒரு தன்னார்வ குழுவில் இணைந்துள்ளார்.