கார் விபத்து விவகாரம்: 'ரவீனா டாண்டன் மது அருந்தவில்லை' - மும்பை போலீஸ்
சிசிடிவி வீடியோவில் ரவீனாவின் கார் அந்த பெண் மீது மோதாமல் விலகிச் செல்வது பதிவாகியுள்ளது.
மும்பை,
மும்பையில் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் மோதியதில் பெண் ஒருவர் காயமடைந்ததாக புகார் எழுந்தது. மும்பையின் ககர் பகுதியில் கார்ட்டர் சாலையில் உள்ள ரவீனா டாண்டனின் வீட்டின் அருகே காரை பார்க் செய்யும் இடத்தில் இந்த சம்பவம் நடந்தது.
அப்போது காரின் உள்ளே இருந்து இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்பட்டது. ரவீனாவை அங்கிருந்த பலர் சூழ்ந்துகொள்ளவே, "தயவு செய்து என்னை அடிக்காதீர்கள், என்னை தள்ளாதீர்கள்" என்று ரவீனா அவர்களிடம் கத்தினார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் படம் பிடிப்பதை பார்த்த ரவீனா செல்போனை தட்டிவிட முயற்சித்ததும் வீடியோவில் பதிவானது.
இந்த சம்பவம் தொடர்பாக காயமடைந்ததாக கூறிய பெண்ணின் குடும்பத்தினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு கார் டிரைவரும் ரவீனாவும் தங்களை தாக்கியதாக குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த சிசிடிவி வீடியோவில் ரவீனாவின் கார் அந்த பெண் மீது மோதாமல் விலகிச் செல்வது பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ககர் போலீசார், ரவீனா போதையில் இல்லை என்றும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததன் மூலம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்றும் தெரிவித்துள்ளனர்.