'ரஸாக்கர்' படத்தின் டிரைலர் வெளியீடு
'ரஸாக்கர்' படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
சென்னை,
சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஐதராபாத் நகரில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'ரஸாக்கர்'. பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி தயாரித்து உள்ளார். யதா சத்யநாராயணா இயக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பாபி சிம்ஹா, "முதலில் இந்தக் கதையை கேட்டபோது, எனக்கே சரியாக புரியவில்லை. பின்னர் உண்மை குறித்து தேடித் தெரிந்துகொண்டேன். உடனே கண்டிப்பாக இந்தப் படம் செய்கிறேன் என்றேன். உலகத்திற்கு இந்த கதை தெரிய வேண்டும். படத்தில் அத்தனை கலைஞர்களும் மிகவும் அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இந்த படம் வரலாற்றில் மிக முக்கியமான படமாக இருக்கும்" என்று கூறினார்.
நடிகை வேதிகா பேசும்போது, "ஐதராபாத் மாநிலத்திற்கு 1948-ல் தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆனால் அது பலருக்கு தெரியாது. அந்த வரலாற்றின் உண்மையைச் சொல்லும் படத்தில் நானும் இருப்பது பெருமை" என்று கூறினார்.